சூர்யா, ஜோதிகா மீது வழக்கு

உண்மை கதையை திரைப்படமாக எடுப்பதாகக்கூறி, நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘ஜெய்பீம்’. உண்மை சம்பவத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவ காவல்துறை அதிகாரியை இத்திரைப்படத்தில் வேண்டுமென்றே ஹிந்து வன்னியராக காட்டியது உட்பட பல பொய்கள் திட்டமிட்டே திணிக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இத்திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், ‛தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலும் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன’ என குற்றம் சாட்டியிருந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜோதிகா சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்யவும் முதல் தகவல் அறிக்கையை மே 20ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் வேளச்சேரி காவல் நிலைய கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.