பேரூர் ஆதீனம் வலியுறுத்தல்

தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதித்துள்ள தடையை அரசு நீக்குவதோடு, தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வலியுறுத்தியுள்ளார். ‘நமது சமயம் மிக தொன்மையானது. ஏராளமான சம்பிரதாயங்களை கொண்டது. குறிப்பாக சைவ சமயத்தில் பெருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. கோயில்களை போல் ஆதினங்களிலும், மடங்களிலும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் கொத்தடிமை முறையோ, ஆண்டான் அடிமை முறையோ, மக்களை துன்புறுத்தும் முறையோ ஏதும் இல்லை. ‛குருவே சிவம்’ என சீடர்கள் சுற்றி வருகின்றனர். இது மரபு. இதற்கு தடை விதித்திருப்பது  வருத்தத்திற்குறியது. இதனால் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தடையை நீக்க வேண்டும். இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது. நமது நாடு மதச்சார்பற்ற நாடாக உள்ள நிலையில் ஹிந்து சமயத்திற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். இதை மாற்ற வேண்டும். இத்தகைய நெறிமுறைகள் இருந்தால் ஆதீனங்கள், மடாதிபதிகளை அழைத்து ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டும். அடியார்கள் போன்றோரின் கருத்து அடிப்படையில் தடை செய்ய கூடாது. தற்போது அறிவித்த தடையை ரத்து செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.