ஆன்மீக தலைநகர் தமிழகம்

இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு குறித்த 12வது கருத்தரங்கம் சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மத்திய  அமைச்சர் புர்ஷோத்தம் ரூபாலா, தமிழக  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ஆளுநர், “பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. முன்பெல்லாம் புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் முதல் ஆண்டு முழுவதும் புதிய திட்டங்களை அறிவிப்பதற்கும் அதற்கு நிதி ஒதுக்குவதற்கும் செலவிடுவார்கள். நான்காம் ஆண்டு அனைத்தையும் மறந்துவிட்டு தேர்தலை பற்றியே யோசிப்பார்கள். அடுத்து ஆட்சிக்கு வருபவர்களும் இதேபோல் செயல்படுவதுதான் வழக்கம். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்காமல், அடுத்த 25 ஆண்டுகளில் பாரதம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்படுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகிற்கு வழிகாட்டும் நாடாக பாரதம் திகழ வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். கொரோனாவை கட்டுப்படுத்த 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை நமது நாடு வழங்கியது. இதுதான் புதிய பாரதம். பாரதத்தின் ஆன்மீக தலைநகராக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தை சேர்ந்த முக்கிய பெரியவர்கள் பலரும் இதைத்தான் கூறி இருக்கிறார்கள்” எனவும் உரையாற்றினார்.