முன்களப் பணியாளர்களா ஊடகவியலாளர்கள்?

பத்திரிகையாளர்கள் இனி முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்பே அறிவித்திருக்கிறார், மு.க.ஸ்டாலின். அவர் இன்னும் முதல்வராகவே பொறுப்பேற்றிடாத நிலையில், இந்த அறிவிப்பு செல்லுபடியாகுமா? தலைமை செயலாளர் இந்த அறிவிப்பை அரசாணையாக அறிவித்திருக்கிறாரா?

மேலும், இந்த அறிவிப்பு பத்திரிகை, காட்சி ஊடகவியாளர்களுக்குப் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எத்தகைய ஊடகவியலாளர்கள், முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் அரசு அங்கீகாரம் பெற குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்குக் கூட அரசின் அங்கீகாரம் கிடைக்காத நிலை உள்ளது. அப்படியே அங்கீகாரம் கிடைத்துவிட்டாலும் அவர்களின் வயது, அனுபவம் கருதி வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. புதிதாக பணியில் சேரும் பத்திரிகையாளர்கள், இளைஞர்கள் மட்டுமே தினசரி ஓடியாடி பணியாற்றும் நிலை உள்ளது. அவர்களின் ஊதியமும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதில்லை. எனவே, அவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

முன்களப் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. அவர்கள் பணியின்போது இறந்தால் ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்தகைய சலுகைகள் சாமானிய பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு கொரோனா தொற்றால் ஆபத்து நேரிட்டால், அலுவலக அடையாள அட்டையே போதுமானது என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்த 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் அளிக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

கொரோனா ஊரடங்கின் முதல் நாளில் இருந்தே பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பணிக்கு வந்தாக வேண்டும் என்று நிறுவனங்களும் வலியுறுத்துகின்றன. வெற்று அறிவிப்பால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரத்தை சரிசெய்து விட நினைத்தால், அதை விட கண்துடைப்பு நடவடிக்கை வேறெதுவுமில்லை.

பிரவிண்குமார்