முன்னுதாரணமான ஒரு கலெக்டர்

ஐ.ஏ.எஸ் அதிகாரியும் மருத்துவருமான ராஜேந்திர பாருத், மகாராஷ்டிராவில் நந்துர்பார் என்ற பழங்குடியினர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முன்கூட்டியே செய்து பலரின் பாராட்டுதல்கலையும் பெற்று வருகிறார். இவரது முன்கூட்டிய திட்டமிடல்களால் தற்போது நந்துர்பாரில் 150 காலி படுக்கைகள், ஒரு நிமிடத்துக்கு 2,400 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 2 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. கடந்த வருடம் கரோனா பரவல் ஆரம்பமான போது நந்துர்பார் மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டில் கரோனா எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தாலும் பல வெளி நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்ததை அடுத்து பாரதத்தில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கலாம் என்று கருதி முன்கூட்டியே திட்டமிட்டு ஆக்சிஜன் உற்பத்தியை செயல்படுத்தி இருக்கிறார். இதனால், எதிர்பார்த்தபடி இரண்டாம் அலையில் நந்துர்பார் மாவட்டத்திலும் ஒரு நாளைக்கு 1,200க்கும்மேல் தொற்று ஏற்பட்டாலும் அவரது முன்னெச்சரிக்கை திட்டமிடல்களால் அவசர கால நெருக்கடியை எளிதாக சமாளிக்க முடிந்தது. மேலும் இவர் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதி, அதற்கான நிதி ஏற்பாடுகளுக்காக அரசு நிதி, மாநில பேரிடர் நிதி, மாவட்ட திட்டம், மேம்பாட்டு நிதி என அனைத்து சாத்தியமான நிதி ஆதாரங்களையும் பயன்படுத்தி உள்ளார்.

தற்போது அங்குள்ள பள்ளிகள், சமூதாயக் கூடங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து 19 கரோனா மையங்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளார். அங்கு 7,000 படுக்கைகள், வென்டிலேட்டர் வசதி உள்ள 1,300 படுக்கைகள் ஏற்படுத்தியதுடன் அதற்கு தேவையான மருத்துவர்கள், தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்களையும் ஒருங்கிணைத்துள்ளார். அந்த மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இவரது கோரிக்கையை ஏற்று தேவையான வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.