மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதும் மனம்போல் வாழ்வு என்பதும் ஆழ்ந்த அர்த்தச் செறிவுள்ள வாசகங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனப்பிணைப்புடன் செய்கின்ற பணி எளிதில் வெற்றியடைகிறது. அது உளமார்ந்த திருப்தியை நல்குகிறது. மனப்பிணக்குடன் செய்கின்ற பணி அல்லலை அதிகப்படுத்துகிறது. அது உள்ளத்தை ரணப்படுத்துகிறது.
உணவு, உடை, உறைவிடம், கல்வி, பணி, பொழுதுபோக்கு போன்ற எந்த அம்சத்தை எடுத்துக்கொண்டாலும் திணிப்பு விரும்பத்தக்கதுமல்ல, விவேகமானதுமல்ல. எதையும் வலுக்கட்டாயமாக திணித்தால் எதிர்பார்க்கின்ற விளைவு நிச்சயமாக ஏற்படாது. முற்றிலும் முரணான விளைவே ஏற்படும்.
அசைவ உணவை சாப்பிட விரும்பாதவர்களை புலால் உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அது கடும் கண்டனத்திற்கு உரியது. இதைப்போல அசைவ உணவை சாப்பிட விரும்புவர்களை புலால் புசிக்கக் கூடாது என்று தடுத்தாலும் அது கண்டத்திற்கு உரியதே.
கல்வித்துறையில் குறிப்பிட்ட பாடத்தை படிக்கவேண்டும் என்று தங்கள் மகனையோ, அல்லது மகளையோ பெற்றோர் கட்டாயப்படுத்தும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. தாங்கள் நிறைவேற்ற திட்டமிட்டிருந்தவை, ஈடேறாத போது அந்தக் கனவை தங்கள் வாரிசுகள் மூலம் நனவாக்க முற்படுவது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவில் நெருடலையும் விரிசலையும் ஏற்படுத்திவிடும்.
தங்கள் வாரிசுகளுக்கு பெருமளவு சுதந்திரம் அளிக்கும் பெற்றோரை, குழந்தைகள் உளமார நேசிக்கிறார்கள். பெரிதும் மதிக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் தங்கள் வாரிசுகளின் சுதந்திரச் சிறகுகளை வெட்டிச் சிதைக்கும் பெற்றோரை குழந்தைகள் உளமார நேசிப்பதில்லை. பெற்றோரை மதிப்பதாக இத்தகைய குழந்தைகள் காட்டிக் கொள்வது வெறும் பாவனையாக மட்டுமே இருக்கும்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
என்ற திருவள்ளுவரின் வழிகாட்டுதல் எக்காலத்துக்கும் ஏற்புடையதே. மனத்தளவில் எது மகிழ்ச்சிகரமானது என்று ஒருவர் நினைக்கிறாரோ அதுசார்ந்த உள்ளலும் துள்ளலும் ஓங்குகின்றன. மனத்தளவில் எது மகிழ்ச்சியற்றது என்று ஒருவர் எண்ணுகிறாரோ அதுசார்ந்த நினைவும் நனவும் ஒடுங்குகின்றன.
பெற்றோர் அறிவுரையே கூறக்கூடாது என்ற கருத்தை யாரும் ஆதரிக்க முடியாது. ஆனால் அவர்கள் கூறுகின்ற அறிவுரை இதமானதாக இருக்கவேண்டும். மூன்று அல்லது நான்கு வாய்ப்புகளை குழந்தைகளுக்கு அளித்து இவற்றில் எது அவர்களுக்கு விருப்பமானதோ அதை அவர்கள் தேர்ந்தெடுக்க விட்டுவிடவேண்டும். இவ்வாறு செய்தால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு என்றென்றும் வளர்பிறையாக உயர்ந்தோங்கும்.