நல்லறிவே நல்லொழுக்கம்

 

அறிவையும் ஒழுக்கத்தையும் நாம் தனித்தனியாக பிரித்துவைத்து பழக்கிக் கொண்டோம். நாணயத்தில் எவ்வாறு இருபக்கம் இருக்கிறதோ, அதுபோல கல்வி என்ற நாணயத்தில் ஒருபக்கம் நல்லறிவு, மற்றொரு பக்கம் நல்லொழுக்கம். நாணயத்தில் ஒரு பக்கம் தேய்த்தால் செல்லுபடியாகாது. அறிவு, ஒழுக்கம் இவற்றில் ஒன்றை நாம் இழந்தாலும், நாம் முழுமையான கல்வியைப் பெற்றவர்களாக கூறிவிட முடியாது.

எது அறிவு?

சாலையில் தவறுதலாக யாரேனும் குறுக்கே வந்துவிட்டால் நாம் கேட்கும் முதல் கேள்வி அறிவு இருக்கா?” என்பது. பொதுவாகவே அறிவுடையவர்கள் தவறுசெய்ய மாட்டார்கள். நல்லவர்களாக இருப்பார்கள், பொறுப்போடு நடந்துகொள்வார்கள் என்றெல்லாம் நினைத்தும் பேசியும் வருகிறோம்.

அறிவு என்றால் என்ன? அறிவு எங்கே இருக்கிறது, அதை நம்மால் பார்க்கவோ உணரவோ முடியுமா என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன. ஒன்றும் சரியாகப் புரியவில்லையே? இந்த கேள்விக்கு யாரை கேட்டால் சரியான பதில் கிடைக்கும் என்று எண்ணியபோது முதலில் நினைவில் வந்தவர் வள்ளுவப் பெருந்தகை. அறிவுடைமை என்று ஓர் அதிகாரமே வகுத்த அவரைவிட யாரால் இதற்கு தெளிவான பதில் கூறமுடியும்?

சென்ற விடத்தாற் செலவிடா தீ தொரீ

நன்றின்பால் உய்ப்ப அறிவு

– குறள் 422

மனதை அதன் விருப்பம் போல் எல்லா வழிகளிலும் செல்லவிடாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமையில் இருந்து நீக்கி மனதிற்கு எது நன்மை தருமோ, எது சிறப்பைத் தருமோ, எது நம்மை மேம்படுத்துமோ, எது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையுமோ அவற்றின்பால் மனத்தை செலுத்துவதே அறிவு என்று இக்குறள் மூலம் விளக்கம் தருகிறார். நன்றின்பால் உய்ப்பதே அறிவு” என்று சொல்லிய வள்ளுவர் தீமையை நன்மையாகவும் நன்மையை தீமையாகவும் சிலர் சொல்லுவர். ஆதலால் ஒருபொருளைக் குறித்து பல்வேறு சொல்லினும், அவற்றுள் மெய்யான பொருளையே அறிவுடையார் ஆய்ந்து அறிந்து கொள்ளுவர் என்பது.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்ப தறிவு

என்ற குறளின் பொருள்.

சுருக்கமாக, எது அறிவு என்று அறிவுடைமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லுவது இதுதான். நல்லனவற்றின் பால் நாட்டம், எதையும் கண்களை மூடிக்கொண்டு நம்பாமல் உண்மை என்ன என்று தீர ஆராய்ந்து உண்மைப் பொருள் காணுதல், யார் என்ன சொன்னாலும் அதன் நுட்பத்தை அறிந்துகொள்ளுதல், முன்னொன்று சொல்லி புறமொன்று சொல்லா நேர்மை, உலகத்தோடு பொருந்திய வகையில் வாழ்தல் போன்றவற்றை திறம்பட புரிந்து செயல்படும் ஆற்றல் படைத்தவர்களே அறிவுமிக்கவர்கள் ஆவார்கள்.

இன்று கல்வி எவ்வாறு உள்ளது? பணத்தைத் தேடுவதற்கான கருவி கல்வி அல்ல. கல்வியின் நோக்கமும் பணம் தேடுவதல்ல. இந்த பாடத்திட்டம் உள்ள கல்வி தாழ்ந்தது என கல்வியிலும் உயர்வு, தாழ்வு பார்க்கப்படுகிறது. இந்த உலகம் போட்டிகள் நிறைந்த வணிகச் சந்தை. இந்த வணிகச் சந்தையில் வெற்றியாளனாக வரவேண்டுமென்றால் பணத்தைத் தேடவேண்டும். பணத்தைத் தேட வேண்டுமென்றால் கல்வியைப் பெற்றாக வேண்டும். பணத்தைக் கொடுத்து கல்வியைப் பெறுவதும், கல்வியைக் கற்றபின் பணத்தைப் பெருக்குவதும் இன்றைய கல்வியின் நோக்கமாக மலிந்துவிட்டது. அறிவுத் தேடலுக்காகவும் ஆன்ம தேடலுக்காகவும் கல்வி கற்க வேண்டுமென்று இங்கு யாரும் சொல்வதில்லை.

எது கல்வி?

கல்வியின் வேர்ச்சொல் ‘கல்லுதல்’ என்ற சொல்லில் இருந்து வந்துள்ளது. கல்லுதல்தான் கல்வி. கல்லுதல் என்றால் ‘தோண்டி எடுத்தல்’ என்று பொருள்படும். எதைத் தோண்டுவது புதையலையா? எனக்குள்ளே மறைந்திருக்கும் நற்பண்புகளையும் திறமைகளையும் ஆற்றல்களையும் எனக்குள்ளே தோண்டி எடுப்பது நீ யார்? என்று உனக்குள்ளே உன்னைத்தோண்டி எடுத்து இனங்காணச் செய்வது. உள்முகத் தேடுதலுக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதுதான் கல்வி. தகவல்களின் களஞ்சியம் அல்ல கல்வி.

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனை தன் சொந்தக் கால்களில் நிற்கச் செய்யுமோ, நமக்குத் தேவை. மனிதனுக்குள்ளே புதைந்து இருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி” என்பது சுவாமி விவேகானந்தரின் கல்வி பற்றிய கருத்து.

கல்வி குறித்த பார்வை நம்மிடையே மாற வேண்டும். எல்லாப் பிள்ளைகளும் டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, கணிப்பொறி வல்லுநர்களாக மாறிவிட்டால், மற்ற தொழில்களைப்  பார்ப்பவர் யார்? மருத்துவம், கட்டடம், கணிப்பொறி ஆகிய இவை மட்டும் மனிதர்களுக்கு போதுமா?  பயிர் வளர்ப்பது யார்? சோறு படைப்பது யார்? ஆடையை நெசவு செய்வது யார்? பொருள்களை விநியோகிப்பது யார்? கற்றுக் கொடுப்பது யார்? கலைகளை வளர்ப்பது யார்?

டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். இன்றைய கல்வி ஓர் இளைஞனை ஒரு வேலைக்கான தகுதியுள்ளவனாக்க அவனுக்கு உதவியதே அல்லாமல் அவனை ஒரு பொறுப்புள்ள சமுதாய உணர்வுள்ள குடிமகனாக உயர்த்தவில்லை.” கல்வி கற்ற ஒருவன் தானும் உயர்ந்து இந்த சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்று அவர்  குறிப்பிடுகிறார். வாழ்க்கைக்காக கல்வி, வாழ்க்கையின் மூலம் கல்வி, வாழ்க்கை முழுவதும் கல்வி என்று கூறிய மகாத்மா காந்தி, உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றின் ஆற்றல்களை மலர்வித்து வெளிக்கொணர்வதுதான் கல்வியின் பணி” என்று கூறுகிறார்.

கடைசித் தேர்வு எழுதியவுடனே ஏதோ ஒரு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவுடனோ கற்றல் நின்றுவிடக் கூடாது. சாணக்கிய நீதியில், நாள்தோறும் கற்றல் வேண்டும் நாள்தோறும் ஒரு சுலோகமாவது படிக்கவேண்டும் அல்லது அரை சுலோகமாவது படிக்கவேண்டும் அல்லது ஒரு சொல்லாவது கற்க வேண்டும். உடம்பில் உயிர் உள்ளவரை கற்றலை நிறுத்தக்கூடாது ” என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தகஎன்பது வள்ளுவர் வாக்கு

கல்வியை பழுது அறக் கற்றுத் தான் கற்றபடியே நெறி வழுவாமல் ஒருவன் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்பது இந்தக் குறனின் பொருள்.

கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒரு தடவை வருத்தத்துடன், நாட்டில் பக்தி அதிகரித்துள்ளது. ஆனால் ஒழுக்கம் மட்டும் குறைந்துள்ளது”.

கல்வியின் பயன் அறிவு, அறிவின் பயன் பண்பாடு ஆகும். உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களை எண்ணத்தில், சொல்லில், செயலில் பின்பற்றி மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோம்.