விளம்ப புத்தாண்டு தினத்தன்று வீடு தோறும் துறவிகளுக்கு மரியாதை

நலிவடைந்த பகுதியில் வாழும் சென்னை மக்களின் இல்லங்களுக்கு ஹிந்து துறவியர்கள் ஏப்ரல் 14 அன்று நேரில் சென்று ஆசி அளித்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ப் புத்தாண்டு அன்று நடைபெறும் இந்நிகழ்வினை இப்பகுதி மக்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் ராமானந்த சுவாமிகள், யுக்தேஸ்வரானந்தா சுவாமிகள், ஈஸ்வரானந்தா சுவாமிகள், சாம்பசிவப் பரியா அம்பா சுவாமிகள், யதீஸ்வரி சாம்பசிவ அம்பா உட்பட 45 துறவிகள் கலந்து கொண்டு 87 பகுதிகளுக்குச் சென்று ஆசியுரை வழங்கினர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்க பொறுப்பாளர்கள் வன்னியராஜன், ஸ்தாணுமாலயன்,  சண்முகநாதன், குமாரசாமி, ஜெகதீசன், பூ.மு. ரவிக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டு வழிகாட்டினார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் மாரியம்மன் படமும் குலதெய்வ வழிபாடு என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.

ஆசி பெற்றார், ஆசை நிறைவேறியது!

பெரம்பூர் அருந்ததி நகரில் கடந்த ஆண்டு துறவிகள் யாத்திரை நடைபெற்றபோது ஒரு 30 வயது திருமணமாகாத பெண்மணி  துறவியரை பார்த்து, வீடு இடிந்து விழும் சூழ்நிலை இருக்கிறது, ஆகையால் எங்கள் வீட்டுக்குள் வரவேண்டாம் என்றார். ஆனால் துறவி, பயப்படாதே, நான் உங்கள் வீட்டில் வந்து விளக்கேற்றுகிறேன். அடுத்த ஆண்டுக்குள் உனக்கு திருமணம் ஆகிவிடும்.

புது வீடும் கட்டிக்கொள்வர் என்று ஆசீர்வதித்து வீட்டில் விளக்கேற்றினார். என்ன ஆச்சர்யம்! இந்த ஆண்டு துறவிகள் யாத்திரை சமயத்தில் அந்த பெண்மணி அந்த பகுதிக்கு வந்த துறவியரை உற்சாகமாக வரவேற்றார். இப்போது அவருக்கு திருமணமாகிவிட்டது. புது வீடும் கட்டிவிட்டார். புத்தாண்டு அன்று அவர் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் உணவு ஏற்பாடு செய்திருந்தார். இதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.