9 மாதம் பிரசவ விடுமுறை பெண் நடத்துனர்களிடம் பட்நவீஸ் அரசின் பாசம்

பெண்மை, தாய்மையில்தான் பூரணத்துவம் பெறுகிறது. தாய்மையைப் போற்றாத சமூகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பெண்கள் பல்வேறு பணிகளையும் கவனித்து வருகிறார்கள். பேருந்துகளில் நடத்துனர்களாக பணிபுரியும் பெண்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை பேருந்தில் பயணிப்பவர்களால் சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.

கர்ப்பிணியாக இருக்கும்போது பெண் நடத்துனர்களால் பேருந்தின் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு பயணிகள் நெரிசலை தாண்டி செல்வது மிகவும் கடினம். இதனால் பெண் நடத்துனர்கள் பலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இது எல்லா மாநிலங்களிலுமே நடைபெற்றுள்ளது. இதற்கு எப்படி தீர்வு காணலாம் என்பது குறித்து பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு கோணங்களிலும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் பெண் நடத்துனர்களுக்கு அதிகபட்சம் 6 மாதம் மட்டுமே பிரசவ விடுமுறை அளிக்கப்படுகிறது. சில தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் இதைவிட குறைவாகவே விடுமுறை அளிக்கின்றன.

இதில் மஹாராஷ்ட்ரா அரசு போக்குவரத்து கழகம் முன்னோடியான முற்போக்கான முடிவை எடுத்துள்ளது. மஹாராஷ்ட்ரா அரசு போக்குவரத்துக் கழகத்தின் 1.04 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெண் நடத்துனர்கள் சுமார் 4,400 பேர்.

பெண் நடத்துனர்களின் நிலையை கனிவுடன் கருத்தில் கொண்டு மஹாராஷ்ட்ரா அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் மனித நேயம் சார்ந்த மகத்தான முடிவை எடுத்துள்ளது. இதன்படி பெண் நடத்துனர்கள் இனிமேல் 9 மாதம் பிரசவ விடுமுறை எடுத்துக்கொள்ள தகுதி உடையவர்கள் என போக்குவரத்து கழக தலைமை செய்தி தொடர்பாளர் அபிஜித் போஸ்லே அறிவித்துள்ளார்.

கர்ப்பிணியாக இருக்கும்போது நடத்துனராக பணியாற்றாமல், போக்குவரத்து சார்ந்த இதர பணி எதையாவது மேற்கொள்ளலாம் என்றும் மஹாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மஹாராஷ்ட்ராஅரசு போக்குவரத்து கழகத்தைப் போல மற்ற மாநிலங்களில் இயங்கிவரும் போக்குவரத்து கழகங்களும் போக்குவரத்து நிறுவனங்களும் பெண் நடத்துனர்களுக்கு 9 மாதம் பிரசவ விடுமுறை அளிக்கவேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் குரல் எழுப்பி உள்ளது வரவேற்கத்தக்கதே.