நாடகம் நடக்குது,கதுவா! காவிரி! சினிமா!

நாடகம் 1: கதுவா

கற்பழித்தவனுக்குத் தூக்கு என்ற கருத்தில் மாற்றம் கிடையாது. ஆனால் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசியல் சாயமும், மத சாயமும் பூசுவது கூடாது. பல்வேறு தகவல்கள் வெளி வருகின்ற இச்சமயத்தில்  நாடு முழுவதும் ஊடகங்கள், பா.ஜ.க. மீதும், ஹிந்து அமைப்புகள் மீதும் சேற்றை வாரியிறைத்து வருகின்றன. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு வருடங்களில் 595 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செயப்பட்டுள்ளன.  இதில் ஜம்மு பகுதியில் மட்டும் 382 வழக்குகள்! இந்த வழக்குகளில் கூட ஹிந்து சிறுமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.  அப்பொழுது எழாத பிரச்சினை இப்பொழுது எழக் காரணம்? ஜம்முவில் பெரும்பான்மை மக்கள் ஹிந்துக்கள். 

 

காஷ்மீர் பிரிவினைவாதிகள், ஜம்முவில் அதிக அளவு முஸ்லிம்களைக் குடியமர்த்த வேண்டும் என்பதற்காக செய்யும் தங்கள் செயல்கள் வெளிச்சத்திற்கு வரக் கூடாது என்பதற்காக, திசை திருப்புகிறார்கள்.  கதுவா வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் காட்டில் சடலம் கண்டு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் போது, கோயிலில் அடைத்து வைத்து கற்பழித்தார்கள் என முஸ்லிம் ஊடகங்கள் பொய் செய்தி பரப்பின. கதுவா விவகாரம் நான்கு மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வர வேண்டிய அவசியம்?  மெஹ்பூபா அரசானது, மலைவாழ் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலமாக ஒரு ஆணை வெளியிட்டது. பழங்குடி மக்களை வாழ்விடத்திலிருந்து வெளியேற்றக் கூடாது என்பது அந்த ஆணையின் சாரம். அது பற்றி எவரும் வாய் திறக்கவில்லை. மேலும் கதுவா சம்பவத்திற்கு நான்கு மாதங்கள் கழித்து ஒவைசியின் பேச்சு அப்பட்டமாக வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. ‘கற்பழித்தவர்களை தூக்கிலிடுங்கள், அல்லது நாங்கள் கலவரக்காரர்களாக மாறுவோம்’ என உறுமுகிறார். இந்த வழக்கு சம்பந்தமாக மௌல்வி ஷாநவாஸ் என்பவன் கைது செய்யப்பட்டும் கூட ஹிந்து விரோத பிரச்சாரம் ஓயவில்லை.

நாடகம் 2: காவிரி

காவிரி  பிரச்சினையில் ஒரு தீர்வு காண திட்டம் வகுக்கும்படி  கால நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசு என்ன செய்தது என்பதை இருட்டடித்து தமிழகத்தில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த உதிரிக் கட்சிகள் சித்து விளையாட்டை தொடங்கின. காவிரி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததில் காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.விற்கும் முக்கிய பங்கு உள்ளது என்பது தெரிந்தும், மோடி அரசின் மீது மட்டும் குற்றம் சுமத்தி ஆர்பாட்டம் நடத்தியது ஏன் என்ற கேள்வியை கூட தமிழக ஊடகங்கள் எழுப்பவில்லை. காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் 2007ல் இறுதி தீர்ப்பை அறிவித்த போது, தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட பிறகு செயல்பட வேண்டும் என குறிப்பிட்டது.   மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கூட்டணியரசில் மூன்று தி.மு.க.வினர் கேபினட் அமைச்சர்களாக இருந்தும்  காலதாமதம் செய்த காங்கிரஸ் மீது ஏன் குற்றம் சுமத்தி போராட்டம்  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன், கர்நாடகா தீர்ப்பை எதிர்த்த போது, கூட்டணியில் உள்ள தி.மு.க. ராகுல் காந்தியிடமோ, அல்லது சோனியாவிடமோ தங்களது எதிர்ப்பை காட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சியை கண்டித்து தீர்மானம் போட்டார்களா என்று கேட்க நாதியில்லை.

மார்ச்சில் நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது.  இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய அறிவிப்பை மார்ச் 16 அன்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அனுப்பியது.  அனுப்பிய அறிவிப்பில் தமிழகமும், புதுச்சேரியும் மட்டுமே தீர்ப்பாயம் கூறியது போல், வாரியம் மட்டுமே அமைய வேண்டும் என கூறின.  இதற்கு மாறாக காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவும் கம்யூனிஸ்டு ஆளும் கேரளாவும் தீர்ப்பாயம் கூறியிருப்பது பரிந்துரைதான். எனவே அது ஆணையம் அமைக்கவேண்டியதில்லை, மேலாண்மை வாரியமே வேண்டாம், நிர்வாக ஆணையமே போதும் என வலியுறுத்தியது.  இன்னும் ஒருபடி மேலே போ, கர்நாடகா, உச்ச நீதிமன்றம் பணித்திருப்பது சச்சரவைத் தீர்க்கும் முறையே தவிர, மேலாண்மை வாரியம் அல்ல என கூறியது.  தமிழகத்தில் பொங்கும் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ்காரர்களும் இதை கண்டித்து ஏன் போராட்டம் நடத்தவில்லை? கோழைகள்.

 

நாடகம் 3: சினிமா

காவிரி பிரச்சினையில் சினிமா இயக்குநர்கள் கும்பல் அடித்த கூத்து அசிங்கத்திலும் அசிங்கம். தமிழினத்திற்காகவே போராடுவதாக கூறும் இவர்கள், தமிழக நலன் பாதிக்கப்பட்ட போதும், தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடிய போதும் எங்கே போனார்கள்? ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது என்பதற்காகவும் மோடி தமிழகம் வருவதை தடுப்பதற்காகவும் கருப்புப் கொடி போராட்டம் என்ற பெயரில் நடத்திய வன்முறை பற்றி எவரும் பேச மறுக்கிறார்கள்.   காவல் துறையினரை தாக்கிய போதும், அது வன்முறையாக தெரியவில்லை.  தனியார் பேருந்துகளை தாக்கியதில் தமிழர்கள் என்பதை மறந்து வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலாக, நாங்கள் அறவழியில் தான் சென்றோம், நாங்கள் செய்தது எதிர்வினை தான், அதை பூதாகரமாக காட்டக் கூடாது என்கிறார் பாரதி ராஜா.  சீமானை கைது செய்ய விடமாட்டோம் என வரிந்துகட்டியவர்  தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொறுப்பாளர் பெ.மணியரசன்  ( நக்சல்களுடன் தொடர்பில் இருப்பவர், வங்கிகளை கொள்ளையடித்தவர், வெடி குண்டு தாக்குதலை நடத்தியவர் ). காவிரி பிரச்சினையை மையமாக வைத்து போராட்டம் நடத்தும் போது, நீட் தேர்வு எங்கே வந்தது?  கோட்டையை இழுத்து மூடுவோம், கவர்னர் மாளிகையை இழுத்து மூடுவோம் என்றார்கள்! ‘என்ன திமிர் இருந்தால், இவ்வளவு போராட்டம் நடக்கும் போது, ஐ.பி.எல். போட்டி நடத்துவோம் என்பீர்கள்?’ என கேள்வி கேட்கும் கவுதமன்,  தமிழகத்தில் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் மூடப்பவில்லை என்பதும், சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதையும் மறந்து விட்டு கொக்கரித்தார்.

காவிரி பிரச்சினையில், தேவைப் பட்டால் ஆயுதம் ஏந்துவோம் என்றார் அமீர். தேவைப்பட்டால் தனி தமிழ்நாடு போராட்டத்திற்கும் ஆயுத போராட்டம் நடத்துவோம் என்கிறார். இந்தியாவிற்கு எதிராக ஆயுதம் தூக்கினால், அரசு வேடிக்கை பார்க்கும் என நினைத்துக் கொண்டு பேசுகிற இந்த கோமாளிகளுக்கு,  பாரத தேசத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை கொண்டு வந்த சிமியுடனும், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு உண்டு.