தமிழகத் தொழில்கள் தலைநிமிர ராணுவக் கண்காட்சி தோரண வாயில்!

இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட சதுர அடியில் அரங்கங்கள், 47 நாடுகளின் பங்கேற்பு, 650க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்களிப்பு, சுமார் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வர்த்தக ஒப்பந்தங்களின் எதிர்பார்ப்பு, பங்குபெற்ற நிறுவனங்களில் சுமார் 150 வெளிநாட்டு  நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட நாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என நம் தமிழகம் இதுவரை பார்த்திராத மிக பிரம்மாண்டமான ராணுவ தளவாட கண்காட்சி அது. காட்சிப்படுத்தப்பட்ட ராணுவ தளவாட பொருட்கள் சம்பந்தப்பட்ட பிரத்தியேக அமர்வுகள், கருத்தரங்கங்கள், அவற்றின் விவரங்கள் பற்றி அறிய வந்திருந்த நம் நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு சர்வதேச அளவிளான கண்காட்சி அது! ஏப்ரல் 11 அன்று சென்னையை அடுத்த திருவிடந்தையில் மிக சிறப்பாக தொடங்கி 3 நாள் நடைபெற்றது. காலையில் இருந்து மாலைவரை  ஒவ்வொரு அரங்கமாக பார்க்க கால்வலிக்க நடந்து திரும்பி பார்த்தால் இன்னும் பார்க்கவேண்டிய அரங்கங்கள் நிறைய மீதம்! நம் நாட்டில் இவ்வளவு ராணுவ தளவாட தொழில் நிறுவனங்கள் இருக்கின்றனவா அவை இத்தனை பொருட்களை இங்கேயே தயாரிக்கின்றனவா! பெரிய பெரிய கட்டடங்கள் கட்ட பெயர்பெற்ற எல்-அன்ட் டி நிறுவனம் ராணுவ டாங்கிகள், பீரங்கிகள் போன்றவற்றை தயாரிக்கிறது; பல தொழில்களை செய்யும் இந்திய முன்னணி நிறுவனமான டாடா ராணுவத்திற்கு தேவையான ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் போன்றவற்றை தயாரிக்கிறது! இது மட்டுமா சென்னை ஐ.ஐ.டி யின் அரங்கு, என்.சி.சி மாணவர்களின் அரங்குகளும் நம்மை வரவேற்கின்றன. அதிக சேதம் ஏற்படுத்தாத பிளாஸ்டிக் தோட்டாக்கள் முதல் அணுகுண்டை சுமந்துசென்று துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் வரை அங்கு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய பெரிய கவச வாகனங்கள், வானளாவிய பீரங்கிகள், நடுங்கவைக்கும் டாங்கிகள் போன்றவற்றின் அருகில் செல்லும்பொழுதும், தொடும்பொழுதும் ஒரு பயம் கலந்த பரவசம் நம்மை தொற்றிக்கொள்கிறது.

நமது மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மேம்பாடு நிறுவனமான டிஆர்டிஓவின் மிகப்பெரிய அரங்கு நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. அவர்கள் ஏதோ ராணுவ தளவாடங்கள் சம்பந்தமாக மட்டுமே ஆராச்சி செய்வார்கள், தயாரிப்பார்கள் என நினைத்திருந்த நமக்கு அவர்களின் படைப்புகள், ஆராச்சிகள், தயாரிப்புகள் அனைத்தும் காணும்பொழுது அது ஒரு தனி உலகமாகவே தெரிகிறது, அங்கு விமானங்கள், ஏவுகணைகள், ராணுவ ஆயுதங்கள் போன்றவை மட்டுமில்லாமல் ராணுவ வீரர்களுக்கான கொசுவிரட்டி, பாம்பு விரட்டி, மலையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு என மேம்படுத்தப்பட்ட மூலிகை தேனீர், பாலைவன வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சன் ஸ்கிரீன் லோஷன் எனப்படும் சூரிய பாதுகாப்பு களிம்பு போன்ற எண்ணற்ற சிறுசிறு பொருட்களைகூட ஆராச்சி செய்து கண்டுபிடித்து தயாரிக்கின்றனர். எட்டு  பத்திரிகைகளும் நடத்துகின்றனர்.

அந்த அரங்கின் எதிர்ப்புறம் நமது தேசத்தின் சிறப்புகளில் ஒன்றை காணும்பொழுது அனைவரின் கண்களும் பரவசத்தில் விரிகின்றன, அமெரிக்காவே பத்து ஆண்டுகளாக ஆராச்சி செய்தும் கண்டுபிடிக்கமுடியாமல் தோற்றுபோன, (ரஷ்யாவுடன் நாம் கூட்டு சேர்ந்து தயாரித்துள்ள) உலகையே நம் பக்கமாக திரும்பிபார்க்கவைத்த, நம்மிடம் மட்டுமே உள்ள உலகின் அதிவேக ஏவுகணையான ‘பிரமோஸ் அரங்கம் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இந்த ஏவுகணையை நிலத்தில் இருந்து மட்டும் அல்ல, கப்பல், நீர்மூழ்கி கப்பல், போர்விமானம் போன்றவற்றில் இருந்துகூட ஏவமுடியும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இருந்து ஒருமீட்டர் சுற்றளவுக்குள் தாக்கும் அதன் மிக துல்லியமான செயல்பாடு உலகின் மற்ற நாடுகளை இன்றளவும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. நம் மக்கள் மட்டும் அல்ல, அங்கு வந்த பல வெளிநாட்டினரும்கூட அதை ஆர்வமாக பார்த்துச் செல்கின்றனர்.

ராணுவத்தின் வீரதீர சாகசங்கள் ஒருபுறம் நம் கவனத்தை ஈர்த்தது என்றால் துறைமுகத்தில் நிறுத்திவைக்கபட்டுள்ள நமது ராணுவ கப்பல்களையும், பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதித்தது ராணுவத்தின் மீதான நம் ஆர்வத்தை தூண்டியது.  ராணுவ ரீதியிலான பலத்தை அதிகரிப்பது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க செய்வதுடன் மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர்ந்து தேசப்பணியாற்ற ஊக்கமூட்டுவது, பொதுமக்களுக்கு நம் தேசத்தின் மீதான பற்றையும் நம்பிக்கையும் அதிகப்படுத்துவது இவைதான் கண்காட்சியின் நோக்கங்கள்.

 இந்த ராணுவக் கண்காட்சி பாரத அரசால் பொதுவாக வடமாநிலங்களில்தான் நடத்தப்படுவது வழக்கம். முதன்முறையாக நம் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி பெற வேண்டி தமிழகத்தை சார்ந்த முதல் பெண் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பாரத பிரதமரும் மேற்கொண்ட இந்த சீரிய முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது.

 நாம் பார்த்ததில் அங்கு பங்கு பெற்ற நம் உள்நாட்டு நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றின் பங்களிப்பு சற்று குறைவாகவே இருந்தது. இந்த குறையை போக்கவும் தேசத்தின் பாதுகாப்புதுறையில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கவும் தற்போது இங்கு நடத்தப்பட்ட ராணுவ தளவாட கண்காட்சி ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். ஒரு சாதாரண கைதுப்பாக்கி தயாரிக்கவே 37க்கும் அதிகமான பொருட்கள் தேவைப்படுகிறது என்றால் பீரங்கி முதற்கொண்டு ஏவுகணைகள் வரை தயாரிக்க எவ்வளவு பொருட்கள் தேவை!! அதை தயாரிக்க எவ்வளவு நிறுவனங்கள் தேவை!! அதில் பணிபுரிய எத்தனை தொழிலாளர்கள் தேவை!!!, அதனால் தமிழகம் எவ்வளவு தொழில் வளர்ச்சி பெறும் என எண்ணும்போது அதன் பிரம்மாண்டம் பாமரனுக்கும் புரியும்.

Jmk மொத்த நாடே வளர்ச்சிப்பாதையில் அதிவேகமாக பயணிக்க ஆரம்பித்திருக்கும் இந்த வேளையில் தமிழகம் மட்டும் பின்தங்குவது தேச வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதை உணர்ந்த மத்திய அரசு, அனைவருக்கும் வீடு திட்டம், இணையம் துறைமுகம், சென்னை சேலம் எட்டுவழி சாலை, பல்வேறு தொழில்வளர்ச்சி பூங்காக்கள், ராணுவ தளவாட உற்பத்தி சாலைகள், பன்னிரண்டு ஸ்மார்ட் சிட்டிகள், எய்ம்ஸ் மருத்துவமனை, செல்வமகள் சேமிப்பு திட்டம் என தமிழ்நாட்டிற்காக பல்வேறு வாய்ப்புகளை திறந்துவிட்டிருக்கிறது. இதை தமிழக அரசும் தமிழக மக்களும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டியது அவர்கள் கையில்தான் உள்ளது.

தேசப் பாதுகாப்புக்கும், தமிழக தொழில் வளர்ச்சிக்கும் வலுசேர்க்கும் இந்த அரிய கண்காட்சியை எதிர்க்கவும் தமிழகத்தில் சில குழுக்கள் துணிந்தது அவமானம்.

இந்த தேசவிரோத குழுக்கள் எவ்வளவு முயற்சிசெய்தாலும் அவர்கள் எண்ணம் நிறைவேறாது. அவர்கள் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் என்பது ராணுவ கண்காட்சியையும், ராணுவ கப்பலையும் காண காலை முதலே ஆர்வமாக திரண்டு வந்திருந்த பொதுமக்களின் உற்சாகமே அத்தாட்சி.

இன்னும் சில நாட்கள் இந்த கண்காட்சி நடக்காதா, அனைத்தையும் ஆசைதீர பார்த்துவிடமாட்டோமா,  மீண்டும் எப்பொழுது இந்த வாய்ப்பு கிடைக்குமோ என நம்மை எல்லாம் ஏங்கவைத்த ராணுவக் கண்காட்சி நிறைவடைந்துவிட்டாலும் அது நமக்கு கொடுத்துள்ள வாய்ப்புகளும் ஏராளம், நாம் பெற்ற படிப்பினைகளும் தாராளம். வாய்ப்புகளை பயன்படுத்தி தேசத்தை வளர்ப்போம், படிப்பினைகளில் இருந்து பாடம் கற்போம், தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என உலகுக்கு உரைப்போம்.