ராணுவத்தால் தமிழகத்தில் ஏற்றமிகு எதிர்காலம்!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் ரக பீரங்கிகளின் சாகசம்; தனுஷ் உள்ளிட்ட ஏவுகணைகள் எல்லாம் மலைக்க வைத்தன. கடற்படையின் சஹ்யாத்ரி, ககேத்திரா, சுமித்ரா, ஷராவத் உள்ளிட்ட நான்கு போர்க் கப்பல்கள் கண்காட்சி தொடக்க நாளிலிருந்தே கரை அருகே நின்று கொண்டிருந்த காட்சியை கண்ட மக்கள் எப்படியாவது அவற்றை நாம் பார்வையிட வேண்டும் என்று வெறியுடன் இருந்தனர். எப்படியோ, மக்கள் வெள்ளத்தில் இக்கப்பல்கள் மிதந்து, திக்கு முக்காடித்தான் போயின.

அமெரிக்க, ரஷ்யா நாட்டு  நிறுவனங்கள் அழகோவியமாக தங்கள் தயாரிப்புக்களை விரித்திருந்த அரங்குகளைக் கண்டதுமே மக்கள் மூக்கில் விரலை வைத்த தருணங்களை காண முடிந்தது.   லாக்ஹீட் மார்ட்டின், போயிங் உள்ளிட்ட சுமார் 17 அமெரிக்க  நிறுவனங்களின் ராணுவத் துறை தயாரிப்புக்கள் பார்வையாளர் கண்களுக்கு  விருந்து. நமது காமெரா கண்களுக்கு அறுசுவை டின்னர்.

பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டயனாமிக்ஸ் இவற்றின் தளவாட வகையறாக்கள், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் ஸின் துருவ் ஹெலிகாப்டர்கள் போன்ற பிரம்மாண்ட தொழில் நுட்ப தயாரிப்புக்கள், இவற்றை கண்டு களித்து  பற்பல தொழில் நுணுக்க செய்திகளை மூளையில் ஏற்றிக்கொள்ள ஒருநாள் போதாது.

தமிழகத்தில் அமைய உள்ள ராணுவத் தொழில் வழித்தடத்துக்கு தேவையான சாலை வசதிகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர தமிழக முதல்வர் ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார்.  கண்காட்சிக்கு முன்னமே, எந்தெந்த பாகங்கள், உதிரி பாகங்கள் தயாரிப்பதில் இங்குள்ள தொழிலகங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்ற முன்வரைவு மேற்கொள்ளப்பட்டு, அவற்றை விரைவு படுத்துவதற்கான முயற்சியில், ஆலோசனை கூட்டங்கள்,  உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றை பற்றிய திட்ட மதிப்பீடுகள் தொடக்க நிலையில் இருந்தன.

தமிழக அரசு வெளியிட்ட தொலைநோக்கு பார்வை செயல் திட்டமான ‘விஷன்-2023’ அறிக்கையிலும், விண்வெளி, ராணுவ துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வலிமையான தொழில் சூழ்நிலை நிலவுவதோடு, திறமையான மண்டிக் கிடக்கின்றன.  இதன் மூலம், விண்வெளி தளவாட ராணுவ உற்பத்தி, சேவை, ஆட்டோமொபைல், இன்ஜினியரிங் சாதன  உற்பத்தி இவற்றில் தமிழகம் மேலும் முக்கியப் பங்கு வகிக்கப்போகின்றது.

தமிழக அரசு,  சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் ராணுவத் துறையில்  25 சதவீத பங்களிப்பை தமிழகம்  அளிக்கவும் இலக்கு வைத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் சென்னை விண்வெளி, பாதுகாப்பு பூங்கா உருவாக்குவது இக்கொள்கையின் ஓர் அங்கமாகும். ஆரம்ப கட்டமாக,  250 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமையவிருக்கிறது.

தமிழகம் மட்டுமல்ல, பரவலாக நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், தரைவழி, விமான போக்குவரத்து முன்னேற்றப் பணிகள் ஜரூராக  நடந்து வரும்  நேரம் இது. நடப்பாண்டில்   முக்கிய திட்டமான போட் டாக்ஸி (Pod Taxi) திட்டத்தை கொண்டுவருவதற்கான வேலைகளை தொடங்க இருக்கும் இவ்வேளையில், நம் நாட்டில்   10,000 நீர் விமானங்களை இயக்குவதற்கான வாய்ப்பு  இருப்பதாகவும் இதன் மூலம் உள்நாட்டு போக்குவரத்தை மேம்படுத்த முடியும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி ஒருமுறை தெரிவித்திருந்தார். உள்நாட்டில்  உற்பத்தி செய்த பாதுகாப்பு தளவாடங்கள் தாமதம் இன்றி உரிய இடங்களுக்கு சென்றடைய இவை போன்ற  போக்குவரத்து அமைப்புகள்  பாதுகாப்பாக துணை செயப்போகின்றன.

கல்யாணி ராபேல் அட்வன்ஸ்ட் சிஸ்டம் நிறுவன  அஸோஸியேட் உதவி தலைவர்   ரவீந்திர நாயுடு கூறுவதென்ன?  கோவை போன்ற பெரு நகரங்களில் செயல்பட்டு வரும் பெரிய சிறிய நிறுவனங்களுடன் பல ஆண்டுகளாகவே எங்கள் தொழில் தொடர்பு தொடர்ந்து உள்ளது. மேலும் உருவாக்கப் போகும் உள்நாட்டு தயாரிப்புக்கள் மூலம் இத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியும் உறுதி. அதேநேரம் இதர பெரிய சிறிய  நிறுவனங்கள்  காரிடார்களில் தங்கள் உற்பத்தி மையங்களை உருவாக்கல்/விரிவாக்கம் செய்யும் போது, வேலை வாய்ப்புக்கள் பெருகப்போவதும்    நிச்சயம்.” என்றார்.

(கட்டுரையாளர், பத்திரிகையாளர்,

மக்கள் தொடர்பாளர், தன்னூக்க பேச்சாளர்)

கண்காட்சியின் நிறைவு நாளை முன்னிட்டு, பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்குத்தான் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தும் கூட, காலை 5 மணியில் இருந்தே பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட வந்தனர்.

ரூ.800 கோடி செலவில், 2.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த கண்காட்சியில் 701 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன. 539 இந்திய நிறுவனங்கள், 162 வெளிநாட்டு நிறுவனங்கள்.

நம்ம ஜனங்க, நல்ல ஜனங்க!

டாங்கிகள், போர் விமானங்கள், ஏகே 47 துப்பாக்கிகள் இவற்றுடன் செல்பி எடுத்துக் கொண்டதுடன் டாங்கியின் மீது ஏறி உட்கார்ந்து, கொண்டு வந்த லெமன் ரைஸை ஒரு பிடிபிடித்து (சிறிது டாங்கி மீதே இறைத்து) சில கில்லாடிகள் ராணுவத்திடம் தங்களுக்கு உள்ள பந்தத்தையும் பாசத்தையும் காட்டத் தவறவில்லை! ராணுவ தளவாடங்களுடன் செல்பி எடுத்துக்கொண்டவர்களின் முகத்தில் ராணுவம் குறித்த பெருமிதம் பளிச்சிட்டது கவனத்தைக் கவர்ந்தது.

திருவிடந்தை திணறிய போது...

விளம்பி புத்தாண்டு தினம் லட்சக்கணக்கான சென்னை வாசிகளுக்கு அதிரடியான ஒரு ஆனந்தம் கொண்டு வந்தது. ராணுவ தளவாடக் கண்காட்சிதான் அது. சென்னை, சுற்றுப்புற மாவட்ட மக்கள் மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ள திருவிடந்தை நோக்கி வீறுநடை போட்டார்கள். காரணம் வாகனங்கள் கிலோ மீட்டர் கணக்கில் வரிசை கட்டினவே தவிர நகரவில்லை. அப்படி ஒரு நெரிசல். சுமார் 10 கிலோ மீட்டர் வரை கூட நடையாய் நடந்து கண்காட்சியைப் உண்டு.

கண்காட்சியில் ஏற்பாடுகள் எல்லாமே வர்த்தக பரிவர்த்தனைக்கான வந்த நிறுவனங்களின் அலுவலர்களுக்காக மட்டுமே. பொதுமக்களின் ஆவேசமான ஆர்வம் இப்படி அலையடிக்கும் என்று கண்காட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை. மக்களுக்கும் உற்சாக உந்துதல் இருந்ததால் ஏற்பாடு பற்றியெல்லாம் அவர்கள் அலட்டிக்கொள்ளவே இல்லை.

சில ஆயிரம் பேர் கண்காட்சிக்கு பார்வையாளர்களாக வருவார்கள் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால் கண்காட்சியைவெற்றிகரமாக சென்றடைந்து பார்த்து பிரமித்தவர்கள் மட்டுமே 3 லட்சம் பேர். அதே அளவு கூட்டம் திருவிடைந்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது என்பது கடைசித் தகவல்.

மக்களுக்கு மகிழ்ச்சி, அரசுக்கு திருப்தி, ராணுவத்தினருக்கு மன=நிறைவு. குறிப்பாக,தேசத்தின் எல்லை நெடுக கால்கடுக்க நின்று காவல் பணி புரியும் ராணுவ வீரர்களுக்கு புதிய தெம்பு ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் ராணுவ விஷயங்களில் பொதுமக்கள் காட்டிய அபரிமிதமான ஆர்வம், நமது ஜவான்களுக்கு ஆயிரம் யானை பலம் தந்திருக்கும் என்பது உறுதி.