30 சதவீத கமிஷன் கேட்கின்றனர்: ஊராட்சி தலைவர் குமுறல்

கிராம ஊராட்சிகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், பெரும் முறைகேடு நடப்பதாக, ஊராட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம், விசலுார் ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை, முதல்வர் அறிமுகப்படுத்தினார். கிராமங்களில் அடிப்படை வசதிகளை முழு அளவில் பூர்த்தி செய்ய, இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.ஆரம்ப கட்டத்தில், 2,504 ஊராட்சிகளில், 1,148 கோடி ரூபாயில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார், முதல்வர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஒன்றியத்தில், 10 ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.

இதில், சில முறைகேடுகள் நடக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் என்ன பணிகள் நடக்க வேண்டும் என, கிராம ஊராட்சி தலைவர் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் வழியாக, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.ஆனால், அந்த அனுமதி கிடைத்ததும், ஊராட்சி தலைவருக்கே தெரியாமல், ஒப்பந்ததாரர்கள் திடீரென கிராமத்திற்கு வந்து பணிகளை செய்கின்றனர்.

அப்படி செய்யும் போது, தரமற்ற பணிகள் நடக்கின்றன. ஒப்பந்தாரர்களிடம் கேட்டால், ‘ஆளும் கட்சியினருக்கு, 15 சதவீதம்; பணி பெற, 15 சதவீதம் செலவாகிறது.எங்கள் லாபமாக, 10 சதவீதம் எடுக்க வேண்டி உள்ளது. எனவே, இப்படித்தான் பணி செய்ய முடியும்’ என்கின்றனர்.’இ – டெண்டர்’ என்பது, அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டியது. யார் எந்த மூலையில் இருந்தாலும் பங்கு கொள்ளலாம்.ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அவர்கள் சொல்லும் நபர் மட்டுமே, டெண்டர் பதிவு செய்யும் சூழ்நிலை உள்ளது.

இதற்கு காரணம், தி.மு.க.,வினர் கை காட்டும் நபர்களுக்கு மட்டும் தான், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒப்பந்தம் ஒதுக்கப்படுகிறது. இது, மிகப்பெரிய மக்கள் விரோத செயல்.இதனால், கிராமத்தில் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.மத்திய அரசு நிதி திட்டங்களில், எப்படி கிராம ஊராட்சிகளில் நேரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பணிகள் செய்யப்படுகிறதோ, அதே நிலை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திலும் கொண்டு வரப்பட வேண்டும்.இவ்வாறு வீடியோ பதிவில் கூறியுள்ளார்.