இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளன: நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்

”இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளன; இஸ்ரோவும், நாசாவும் இணைந்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன,” என, இந்திய வம்சாவளியை சார்ந்த நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பேசினார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் மற்றும் தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்க வளாகத்தில், ‘மார்ஸ் 2020 – செவ்வாய்க்கு ஏவுதல் முதல் தரையிறக்கம் வரை’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தின.

இதில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில், ஜெட் புரபல்ஷன் ஆய்வக ஏவுதள அமைப்பின் தலைமை இன்ஜினியராக பணியாற்றுபவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானியுமான ஸ்வாதி மோகன், இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியருடன் உரையாடினார். அவர் பேசியதாவது: எனது பூர்வீகம் பெங்களூரு. ஒரு வயதில் அமெரிக்காவில் குடியேறினேன். சிறுவயதில் மருத்துவராகும் ஆசையுடன் வளர்ந்த நான், 8ம் வகுப்பு படித்த போது, இயற்பியல் ஆசிரியர் நடத்திய பாடத்தால் பாதை மாறினேன். தொடர்ந்து, விண்வெளி குறித்த படங்களையும், நுால்களையும், கருத்தரங்குகளையம் கூர்ந்து கவனித்தேன்.

பின், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து, நாசா ஆய்வகத்தில் விண்வெளி உயிரியியல், விண்கல வடிவமைப்பு, ரோவர் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றேன். கடைசியாக, ‘மார்ஸ் 2020’ என்ற திட்டத்தில் பணியாற்றினேன். விண்வெளி ஆய்வகத்தில் பணியாற்றுவது, ஒவ்வொரு நாளும் புதுமைகளை கையாளுவதாகவும், சவால்களை சந்திப்பதாகவும் இருக்கும். தினமும் நாம் நம்மை புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். பூமிக்கு அருகில் உள்ள கோள் என்பதால், செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வு அதிகரித்துள்ளது.

நம் பூமியை விட ஈர்ப்பு விசையும், பொருளின் எடையும் குறைவான, அந்த கோளின் சூழல்களுக்கு ஏற்ப நம் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

பாராசூட் வடிவத்தில் அமைந்த அமைப்புக்குள் ரோவர், லேண்டரை வைத்து, மென்மையாக தரையிறக்க வேண்டும் என்பதால், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். செவ்வாயில் தரையிறங்கிய இடத்தில் நீர் ஓடிய தடம் உள்ளது. அது, எரிமலை குழம்பாகவோ, காற்று அரிப்பாகவோ இருக்கலாம். பாறைகள் நிறைந்த அப்பகுதியில், புதைபடிவம் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

அது, கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான சான்றாக இருக்கலாம். தற்போது, ரோவர், லேண்டரை தரையிறக்கி, படம் எடுத்து ஆராய்கிறோம். எதிர்காலத்தில் இங்கிருந்து அனுப்பப்படும் ராக்கெட் மாதிரிகளை சேகரித்து, மீண்டும் அங்கிருந்து ஏவப்பட்டு பூமியை அடைய வேண்டும். அதற்கான தொழில்நுட்பங்களை விஞ்ஞானியாக கண்டறிய வேண்டும்.

மேலும், ராக்கெட் செல்லும் போது எரிகல் உள்ளிட்ட தடைகள் வந்தால், அவற்றிலிருந்து தப்பித்து பறக்கவும், பல்வேறு கருவிகளை ஒருங்கிணைத்து பணி செய்யவும், செயற்கை நுண்ணறிவின் வாயிலாக தீர்வு காண இயலும். தற்போது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சிறப்புமிக்க ஆய்வுகளை செய்கிறது. அறிவியலை வளர்க்கும் வகையில், நாசாவும், இஸ்ரோவும் பல்வேறு திட்டங்களை இணைந்து செயல்படுத்துகின்றன. அவற்றில் அதிக பெண்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.