சுங்க வரியை ரத்து செய்ய செய்தித்தாள் சங்கம் வலியுறுத்தல்

‘செய்தித்தாள் மீதான, 5 சதவீத சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும்’ என, ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, ஐ.என்.எஸ்., தலைவர் ராகேஷ் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல்கள், செய்தித்தாள் உட்பட, உலகளாவிய வினியோக தொடர்பை கணிசமாக பாதித்துள்ளன.செய்தித்தாள் மீதான, 5 சதவீத சுங்க வரியை மறுபரிசீலனை செய்யும்படி, மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இந்த சுங்க வரி திரும்பப் பெறப்பட்டால், அச்சு ஊடகத் துறைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், வெளியீட்டாளர்கள், தங்கள் நடைமுறை செலவுகளை திறம்பட நிர்வகிக்கவும், நம்பகமான செய்திகள் மற்றும் தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கவும் வழிவகை செய்யும்.
செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், செய்தித்தாள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தில் இடையூறை ஏற்படுத்தி உள்ளது. இதனால், செய்தித்தாள் வினியோகிப்பாளர்கள், வெளியீட்டாளர்களின் முந்தைய உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டர்களை ரத்து செய்கின்றனர். ஜனநாயகத்திற்கு, அச்சு ஊடகத் துறை மிகவும் முக்கியமானது. அரசின் கொள்கைகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை, மலிவான விலையில், நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். சுங்க வரி விவகாரத்தில், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.