இஸ்ரேலில் லெபனான் தாக்குதலில்: கேரள இளைஞர் உயிரிழப்பு, 2 பேர் காயம்

இஸ்ரேலுக்கும் காசாவின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த அக்டோர் 7-ம் தேதி தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் லெபனானில் இருந்து நேற்று முன்தினம் காலையில் ஏவப்பட்ட ஓர் ஏவுகணை, இஸ்ரேலின் வடக்கு எல்லையான மார்கலியோட் அருகில் உள்ள பழத்தோட்டத்தை தாக்கியது. இதில் அங்கு வேலை பார்த்து வந்த கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த நிபின் மேக்ஸ்வெல் என்பவர் உயிரிழந்தார். மேலும் கேரளாவைச் சேர்ந்த புஷ் ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் ஆகிய இருவர் காயம் அடைந்தனர். இவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர்.
இந்த தாக்குதல் குறித்து டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் தனது எக்ஸ் பதிவில்,“வடக்கு இஸ்ரேலின் மார்கலியோட் கிராமத்தில் அமைதியான விவசாயத் தொழிலாளர்கள் மீது ஷியா தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தார் என்ற தகவலை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
கர்ப்பிணி மனைவி 5 வயதில் மகள்: இஸ்ரேலில் இறந்த கேரள இளைஞர் நிபினுக்கு கர்ப்பிணி மனைவியும் 5 வயதில் மகளும் உள்ளனர். இரு மாதங்களுக்கு முன்புதான் நிபின் இஸ்ரேல் சென்றுள்ளார். தனது அண்ணன் இஸ்ரேல் சென்ற ஒரு வாரத்தில் நிபினும் அங்கு சென்றுள்ளார்.
நிபினின் உடல் சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு 4 நாட்களில் கேரளா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இறந்த முதல்இந்தியர் நிபின் ஆவார். இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள்குறிப்பாக வடக்கு மற்றும் தெற்குஎல்லைப் பகுதியில் பணியாற்றுவோர் பாதுகாப்புடன் இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.