ஹிந்து முன்னணியின் முன்னோடி ராம. கோபாலன்: நாதியற்றவர்களா நாம்? இல்லை என்கிறார் இவர்!

மதுரை ரயில் நிலையம். 1984 ஜூன் 18 அன்று காலை 5.30 மணி. கோவையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ராம. கோபாலன் மதுரை ரயில் நிலையம் வந்து இறங்குகிறார். அப்போதெல்லாம் அவருக்கு பயணத்தில் உடன் உதவியாளர் என்று எவரும் கிடையாது. போலீஸ் பாதுகாப்பும் கிடையாது. எனவே அவரே தனது பெட்டி, படுக்கைகளை எடுத்துக் கொண்டு மூன்றாவது பிளாட்பார படிக்கட்டுகளில் ஏறுகிறார். அப்போது அதே ரயிலில் அவரை கண்காணித்துக் கொண்டு வந்த முஸ்லிம் பயங்கரவாதி எஸ்.ஏ. பாட்சா என்பவன் அவரைக் கொலை செய்யும் நோக்கில் பின்புறத்தில் இருந்து தலையில் ஓங்கி ஒரு வெட்டு வெட்டுகிறான். அடுத்த வெட்டு கழுத்தில் வெட்டுகிறான். அவ்வளவுதான் அவர் இனி பிழைக்க மாட்டார் என ஓட முயற்சித்தவனை அங்கிருந்தவர்கள் விரட்டிப் பிடித்தனர். ராம. கோபாலனை கொலை செய்து விட்டால் தமிழகத்தில் ஹிந்து எழுச்சியைத் தடுத்துவிடலாம் என்று அவன் கருதினான். ஆனால் ராம. கோபாலன் தமிழகத்தில் மேலும் பல ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்று மதுரை மீனாட்சி விரும்பினாள். ராம. கோபாலன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பினார். அது மட்டுமல்ல. அவர் பல வருடங்களாக அன்றாடம் ஜபித்து வந்த காயத்ரி மந்திரம் அவருக்கு அதைத் தாங்கும் வலிமையைக் கொடுத்தது. அன்று மதுரையில் கோபால்ஜி சிந்திய ரத்தத்தின் துளி ஒவ்வொன்றும் இன்று ஆல  விருட்சமாக மாறி ஹிந்து முன்னணி பலமான இயக்கமாக உருவெடுத்துள்ளது. தலையில் ஏற்பட்ட வெட்டுத் தழும்பை மறைக்க காவித் தொப்பி அணிய ஆரம்பித்தார்.

ராம. கோபாலன் பற்றி…

ராம. கோபாலனுக்கு சொந்த ஊர் சீர்காழி. கல்லூரி படிப்புக்காக சென்னை வந்தார். சென்னை வேப்பேரியில் உள்ள செங்கல்வராயன் பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருக்கும்போது ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கிடைத்தது. படிப்பு முடிந்த பிறகு மின்சாரத் துறையில் வேலை கிடைத்தது. பாரதம் பிரிவினையான காலம். பாகிஸ்தானிலிருந்து ஹிந்துக்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள். அகதிகளாக வந்த ஹிந்துக்கள் சென்னை ஆவடியில் தங்கியிருந்தார்கள். அந்த முகாமை நண்பர்களுடன் பார்வையிடச் சென்றார் ராம. கோபாலன். பாகிஸ்தானில் அவர்கள் பட்ட துயரங்களையும் குறிப்பாக பெண்கள் அனுபவித்த வேதனைகளையும் ராம. கோபாலன் கேட்டபோது கண் கலங்கினார். இனி தனது வாழ்க்கை ஹிந்து சமுதாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று சபதமெடுத்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பிரச்சாரகராக (முழு நேரம்) பொறுப்பேற்றார்.

கன்யாகுமரி..கன்னி மேரி மாவட்டமாக…

ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்திலேயே கிறிஸ்தவ மிஷனரிகள் கடற்கரையோரம் உள்ள பரதவ குலத்தைச் சேர்ந்த மீனவர்களை மதம் மாற்றினார்கள். அடுத்து வந்த காலகட்டங்களில் நாடார் சமுதாயத்தினரும் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டார்கள்.  கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வளர ஆரம்பித்தவுடன் கிறிஸ்தவ மிஷனரிகள் கன்யாகுமரி மாவட்டத்தை ‘கன்னிமேரி மாவட்டம்’ என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றி முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.

மீனாட்சிபுரம் ரஹ்மத் நகராக…

தென்காசி அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமமான மீனாட்சிபுரத்தில் உள்ள ஹரிஜன குடும்பங்களின் சுமார் 500 பேர் முஸ்லிமாக ஏமாற்றி  மதம் மாற்றப்பட்டனர். இது துவக்கம்தான்.  திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஹரிஜனங்களை முஸ்லிமாக மதம் மாற்ற சதித்திட்டம் தீட்டினர்.

பிள்ளையாருக்கும் ராமருக்கும் செருப்பு மாலை

சேலத்தில் திராவிடர் கழகத்தினர் நடத்திய ஒரு ஊர்வலத்தில் பிள்ளையார் சிலைக்கும் ராமர் சிலைக்கும் செருப்பு மாலை அணிவித்து கொண்டு சென்றனர்.

ஹிந்து முன்னணி உதயம்

இத்தகைய சூழ்நிலையில் ஹிந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச ஒரு இயக்கம் தேவை என்று முடிவெடுத்து ஹிந்து முன்னணி துவக்கப்பட்டது. ராம. கோபாலன் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ஹிந்து முன்னணியில் மாநில அமைப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒரு முறை ஒரு உயர் காவல்துறை அதிகாரி ராம. கோபாலனிடம், உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது அதனால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அதற்கு ராம. கோபாலன் அளித்த பதில்: என்னை யாரும் கொல்ல முடியாது. இறைவன்  நான் பிறக்கும்போதே நான் எத்தனை ஆண்டுகள் வாழவேண்டும் என்பதை எழுதி வைத்திருப்பான். அதனால் சாவைப் பற்றிக் கவலைப் படுவதில் அர்த்தமில்லை. எனக்கு மரண பயமில்லை. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் கணுக்கால் அளவு. எல்லோருக்கும் மரணம் நிச்சயம். அதனால் அதற்குப் பயந்து செயல்படாமல்  இருப்பது முட்டாள்தனம். இறப்பது உடல் தானே தவிர ஆன்மா இல்ேலை. இது தான் ஆன்மிகம்” என்றார்.

வீரத்துறவியின் ஆசைகள்

உங்கள் ஆசைகள் என்ன என்று ஒரு முறை ராம. கோபாலனிடம் கேட்டபோது, சுதந்திரத்தின் போது பிரிந்த இந்தியா மீண்டும் ஒன்றுபட வேண்டும். மதம் மாறிச் சென்ற அத்தனை பேரும் மீண்டும் ஹிந்துக்களாக வேண்டும். ஆயிரக்கணக்கான ஹிந்துக் கோயில்களை இழந்துள்ளோம். அவைகளை மீட்க வேண்டும். இருக்கிற கோயில்களை ஆன்மிகமும், தர்மமும் தழைக்கும் கேந்திரங்களாக மாற்றவேண்டும். இந்த நாடு ஹிந்து நாடு என்று அறிவிக்கப்பட்டு, ராம ராஜ்யமாக மறுமலர்ச்சி அடையவேண்டும். ஹிந்துக்கள் தங்கள் அடையாளங்களை இழந்து விடாமல் தன்னம்பிக்கையோடு வாழவேண்டும்” என்று தெரிவித்தார்.

‘விஜயபாரதம்’ வார இதழ் ஆரம்பத்தில் ‘தியாக பூமி’ என்ற பெயரில் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. சில ஆண்டுகள் ராம. கோபாலன் அதன் ஆசிரியராக இருந்தார். 1978ல் தியாக பூமி  ‘விஜயபாரதம்’ ஆனது. அந்தப் பெயரைச் சூட்டியதும் ராம. கோபாலன்தான்.

இன்று அவர் 90 வயது முடிந்து 91ல் அடியெடுத்து வைக்கிறார். சென்னையில் நடைபெற்ற விழாவில் (நடுப்பக்கம் காண்க) தனது ஏற்புரையில் ஒரு தனி நபரை புகழ்வது, முகஸ்துதி செய்வது நல்லதல்ல என்று ஓரிரு வார்த்தைகளில் தனது கருத்தைக் கூறி நிறைவு செய்தார். பிரம்மாண்டமான விழாவால் அவர் பூரிப்படைந்து விடவில்லை. அப்போதும் தனது எளிமை, தூய்மையை வெளிப்படுத்திக் காட்டியது ஊழியர்களுக்கு சரியான பாதை காட்டியது.