நோபலுக்குத் தூண்டுதல் நாம்!

ஆண்டுதோறும் 6 துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொருளியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பொருளியல் வல்லுனர் ரிச்சர்டு தாலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு தொடர்பாக சர்ச்சை எழுவது புதிதல்ல. அதிலும் குறிப்பாக பொருளியல் விவகாரத்தில் சர்ச்சை எழாமல் இருந்தால்தான் அதிசயம். ‘நட்ஜ் (தூண்டுதல்) கோட்பாடு’ பொருளாதாரத்தில் எத்தகைய விளைவுகளை உருவாக்குகிறது, தூண்டுதல் வாயிலாக பொருளாதார நடவடிக்கைகளை எவ்வாறு சீரமைக்க முடியும் உள்ளிட்ட கருத்துக்களை ரிச்சர்டு தாலர் பல்வேறு உதாரணங்களுடன் துல்லியமாக விளக்கியுள்ளார்.

நல்லவற்றை தூண்டல் மூலம் சாதிக்க எவ்வளவு சாத்தியம் உள்ளதோ அதைப்போல மோசமானவற்றை தூண்டல் மூலம் நிகழ்த்தவும் சாத்தியம் உள்ளது. இதற்கு நல்ல உதாரணமாக பிங்க் வேல் விவகாரத்தையும் மோசமான உதாரணமாக புளூ வேல் விவகாரத்தையும் குறிப்பிடலாம்.

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்த இந்திராகாந்தியை 1977ல் ஜெயப்பிரகாஷ் நாராயணன், நானாஜி தேஷ்முக் போன்றோர் வீழ்த்திக்காட்டினார்கள். கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதை மகாத்மா காந்தி, தீனதயாள் உபாத்யாய போன்றோர் வற்புறுத்தினார்கள். பால்ய விவாகம் நிறுத்தப்பட்டதற்கு ராஜராம் மோகன்ராய் உள்ளிட்டோர் அயராது பாடுபட்டார்கள். நெருக்கடி நிலை வீழ்ச்சி, கடையனுக்கும் கடைத்தேற்றம், பால்ய விவாக நிறுத்தம் ஆகியவற்றை முறையே அரசியல், பொருளியல், சமூகவியல் சார்ந்த செம்மையான மாற்றங்களுக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

ரிச்சர்டு தாலர், சத்தில்லாத ஜங்க் புட் உணவு வகைகளை கூடுமானவரை தவிர்க்க

வேண்டும் என்பதை இளைஞர்களிடையே நற்தூண்டுதல் வாயிலாக எப்படி நடைமுறைபடுத்த முடியும் என்பதற்கான உதாரணத்தை மேற்கோள் காட்டியுள்ளார். இது வேண்டாம் என்று கூறும்போது அதற்கு மாற்றாக இது வேண்டும் குறிப்பிட்டால் அது ஆற்றல் நிறைந்ததாக அமையும் என்பதையும் ரிச்சர்டு தாலர் பதிவு செய்துள்ளார்.

தூண்டுதல் என்பது ஒருவகையில் தூண்டிலே. தூண்டில் மூலமாக எதையும் கவர்ந்திழுக்க முடியும். நல்ல நோக்கத்துக்காக இதை செய்யும்போது நன்மை விளையும். எனவே விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நற்பண்பு கொண்டவர்கள் சமுதாயத்துக்கு பல்வேறு நிலைகளிலும் வழிகாட்ட முடியும். நம் பாரதத்துக்கு இதுவொன்றும் புதிதல்ல. இங்கு முற்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள ஒன்றைத்தான் ரிச்சர்டு தாலர் நவீன உதாரணங்களுடன் எடுத்துரைத்துள்ளார் என்றால் மிகையல்ல.