வேளாண் பட்ஜெட்; வெறும் அறிக்கை: பா.ஜ., விவசாய அணி சாடல்

தமிழக சட்டசபையில்  (பிப்.,20) தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் வெறும் அறிக்கை என பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் விமர்சித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிப்படைத்தன்மையற்ற வேளாண் பட்ஜெட். தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை 70 சதவீதம் மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்துள்ளது. அதில் 80 சதவீதம் திட்டங்கள் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் நடைபெறும் திட்டங்கள்.

 

உதாரணமாக மண்புழு உரம், மண்வள அட்டை மற்றும் வேளாண் காடுகள் திட்டம் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள். முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மத்திய அரசின் என்.எம்.எஸ்.ஏ திட்டம், பண்ணைக்குட்டை, சொட்டுநீர், வேளாண் உட்கட்டமைப்பு போன்றவை மத்திய அரசின் திட்டங்கள்.

 

அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5990 கோடி. அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முறைகேடு செய்ய எளிமையாக வழிவகுப்பவை. ஏற்கனவே பல திட்டங்கள் திமுகவினர் பயனடையும் நிலையில் இத்திட்டங்களும் அவர்களுக்கே பயன் கொடுக்கும், பலன் கொடுக்கும். கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் இந்த அறிக்கையும் வெறும் காகித அறிவிப்பு என்ற உண்மை புரியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.