சென்னை புறவட்ட சாலை உள்ளிட்ட 9 திட்டங்களுக்கு ரூ.12,800 கோடி ஜப்பான் நிதியுதவி

இந்தியாவில் பல்வேறு துறைகள் தொடர்பான ஒன்பது திட்டங்களுக்கு, ஜப்பான் அரசு 12,800 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், வடகிழக்கு சாலைகள் இணைப்பு திட்டத்திற்காகவும், தமிழகத்தில் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புற வட்ட சாலை திட்டத்திற்காகவும், மேலும் மாநிலத்தின் தெற்கு பகுதிக்கான இணைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்காகவும் ஜப்பான் நிதி உதவி வழங்கியுள்ளது.

மேலும், ஹரியானா தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் ராஜஸ்தானின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கும் நிதியுதவி அளித்துள்ளது. தெலுங்கானாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வணிக விரிவாக்கத்திற்கும் ஆதரவளிக்கும் வகையில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரத்யேகமான சரக்கு ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்காகவும், நாகாலாந்தில் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை உருவாக்கவும் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலர் விகாஸ் ஷீல் மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் துாதர் சுகி ஹிரோஷி இடையே கையெழுத்தானது.