வேண்டாம் கடைத்தேங்காய், வழிப்பிள்ளையார் கதை

கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகக் தடை விதித்துள்ளது. நல்லவேளை, யார் யாரிடம் கோயில் நிலம் இருக்கிறதோ, அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு ஆமாம் சாமி போடாமல் ஒரு தடை போட்ட நீதிபதிகளை மனமாரப் பாராட்டுவோம். மேலும் நீதிபதிகள் அறநிலையத்துறையின் 38,000 கோயில்கள் இருக்கின்றனவே. அந்த கோயில்களுக்கு எவ்வளவு நிலம் உள்ளது? அதில் தற்போது எவ்வளவு தூரம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதே போல நீண்ட காலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர்.

பெரிய பெரிய கோயில்களை கட்டிய மன்னர்கள் அதன் பராமரிப்புக்காக சில கிராமங்களையே எழுதி வைத்தனர். மேலும் ஏராளமான நிலங்களை சாமி பெயருக்கு எழுதி வைத்தனர். தமிழகத்தில் 1967 முதல் இன்று வரை திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தி.மு.க. ஆட்சியில் கோயில் சொத்து கபளீகரம் செய்வதில் உலக சாதனையே படைத்து விட்டார்கள்.

அதிமுக ஆட்சியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே. தி.மு.க.வின் ஹிந்து விரோதப் போக்கிற்கு அ.தி.மு.க. ஆட்சியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அடையாளமாக கெளரவம் பார்க்காமல் தமிழக அரசு தனது அரசாணையை வாபஸ் பெற வேண்டும். புறம்போக்கு நிலத்தை ஏழை, எளிய மக்களுக்கு தாராளமாக வாரி வழங்கட்டும். யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை. மாறாக கோயில் சொத்து எதையும் தொட வேண்டாம் என்பதுதான் ஹிந்துக்களின் கோரிக்கை. அ.தி.மு.க. அரசு செவி சாய்க்குமா?