வெளிநாடு செல்லும் இந்தியர்ளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் வெளியுறவு துறை கவனித்து கொள்ளும் என்ற நம்பிக்கை தற்போது ஓங்கி உள்ளது – ஜெய் சங்கர்

பாஜக தென் இந்தியப் பிரிவு சார்பில், தில்லியில் உள்ள தமிழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்று ஜெய்சங்கர் பேசியதாவது:

உலக நாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது, அதைத் தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எடுத்தார். தற்போது, உலகில் எந்த மூலையிலும் இந்தியர்கள் பிரச்னையை எதிர்கொண்டால், அவர்களுக்கு உதவும் வகையிலான நடைமுறையை நாம் உருவாக்கியுள்ளோம்.

வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை வெளியுறவுத் துறை கவனித்துக் கொள்ளும் என்ற மனத் தைரியத்துடன் தற்போது இந்தியர்கள் பயணிக்கிறார்கள்.
சீனாவில் கரோனா வைராஸால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள இந்தியர்களை மீட்டுவருகிறோம். அனைத்து இந்தியர்களையும் மிக விரைவில் மீட்டு விடுவோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளில் இந்தியர்கள் பிரச்னைகளை எதிர்கொண்டால், அதைப் பார்த்துப் பரிதாபப்படும் அரசே இருந்தது. ஆனால், தற்போது அந்தப் பிரச்னைகளைத் துணிந்து தீர்த்து வைக்கும் அரசு உருவாகியுள்ளது. சாதாரண மக்களுக்கான பட்ஜெட்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை சாதாரண மக்களுக்கானது. மாற்றங்கள், சீர்திருத்தங்கள் தொடர்பாக முந்தைய அரசுகள் பல ஆண்டுகளாக பேசி வந்தன. ஆனால், மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் உண்மையாகக் கொண்டுவந்த அரசு மோடி அரசுதான். அதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்காக நலத் திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அடித்தட்டு மக்களைச் சென்றடையாத மக்கள் நலத் திட்டங்களால் பயனில்லை. வெளியுறவுத் துறை அதிகாரியாக வெளிநாடுகளுக்கு சென்றபோதெல்லாம், இந்தியா தொடர்பாக வெளிநாட்டவர்களின் பார்வை மாறியுள்ளதை கவனித்தேன். இப்போது, வெளியுறவுத் துறை அமைச்சராக அதை நன்றாக உணர்கிறேன்.