எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு மாற்றம்

சிறப்பு எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை, தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தவர் வில்சன், 57. இவர், ஜன., 8ல், தமிழக – கேரள எல்லையில் உள்ள, களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார். இரவு, 10:30 மணிக்கு, அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தனர்.10 நாள் காவல்இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அப்துல் சமீம், 29, தவுபீக், 27, ஆகியோர், கர்நாடக மாநிலம், உடுப்பியில், அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டனர்; தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி போலீசார், இருவரையும், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, அவர்களது கூட்டாளிகள், கர்நாடக மாநிலம், பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தமிழக, ‘கியூ’ பிரிவு போலீசார் அங்கு முகாமிட்டு, கார் ஓட்டுனராக வேலை பார்த்த இஜாஸ் பாஷா, 33, மெகபூப் பாஷா, 44, ஆகியோரை கைது செய்தனர்.

அதற்கு முன், பயங்கரவாதிகளின் கூட்டாளிகளான, முகமது ஹனீப் கான், 23, இம்ரான் கான், 32, முகமது ஜெயித், 24, ஆகியோரையும் பெங்களூரில் கைது செய்தனர்.டில்லியில் பதுங்கல்மேலும், டில்லியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், சையது அலி நவாஸ், 25, காஜா மொய்தீன், 47, ஆகியோரும், அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல, காஞ்சிபுரத்தில், போலி ஆவணங்கள் வாயிலாக, பயங்கரவாதிகளுக்கு, ‘சிம் கார்டு’கள் விற்பனை செய்தோரும் சிக்கினர். இவ்வாறு, 18 பேர் கைதாகி உள்ளனர்.இதில், சிறப்பு எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு தவிர, பயங்கரவாதம் சார்ந்த மற்ற வழக்குகள் அனைத்தும், ஏற்கனவே தமிழக அரசின் பரிந்துரையின்படி, மத்திய அரசு, தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைத்தது.

வில்சன் கொலை வழக்கை, தமிழக போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது; அந்த அமைப்புக்கு, வெளிநாடுகளில் நிதி திரட்டி உள்ளனர். தகவல் தொடர்புக்கு, பிரத்யேக சாப்ட்வேர் தயாரித்துள்ளனர்.

இந்த பயங்கரவாதிகளின், ‘நெட் ஒர்க்’ அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.இதனால், சிறப்பு எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கும், தமிழக அரசின் பரிந்துரையின்படி, மத்திய அரசு, என்.ஐ.ஏ.,விடம் நேற்று ஒப்படைத்தது. விரைவில், என்.ஐ.ஏ., அதிகாரிகளும், அப்துல் சமீம், தவுபீக் உள்ளிட்ட பயங்கரவாதிகளை, அடுத்தடுத்து தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.