வீரத்துறவி இராம கோபாலன்

வீரத்துறவி இராம கோபாலன் 19.9.1927ல் தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர். 1945ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார். டிப்ளமோ, ஏ.எம்.ஐ.ஈ. படித்து முடித்த பிறகு மின்சாரத் துறையில் வேலை பார்த்தார். பிறகு அந்த அரசு வேலையை உதறிவிட்டு முழுநேர ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரகராக ஆனார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் செம்மையாக பணியாற்றினார். மாநில அமைப்பாளர் பொறுப்பில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் இயக்க வேலைகள் வளரக் காரணமாக இருந்தவர்.

1948ல் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டபோதும், 1975 எமர்ஜென்சி நேரத்திலும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரியக்கத்தை உயிர்ப்போடு வழிநடத்தியவர். தமிழகத்தில் நிலவிய அசாதாரண ஹிந்து விரோத சூழ்நிலையை கருத்தில் கொண்டு 1980ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வழிகாட்டுதலில் இராம.கோபாலன் உருவாக்கிய இயக்கம் தான் இந்து முன்னணி.

இந்து முன்னணி வளர்ச்சிக்காக இராம கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தமிழகத்தில் அவர் கால் படாத ஊர்களே கிடையாது. 1984ல் மதுரை ரயில் நிலையத்தில் இவர் மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்றது. இதில் இவரது கழுத்திலும் தலையிலும் பலத்த வெட்டு. தழும்பை மறைக்க அன்றிலிருந்து காவித் தொப்பியை அணிய ஆரம்பித்தார்.

ஆனால் இவை எல்லாம் அவரது தேசப் பணியை முடக்கவில்லை. பல மடங்கு உற்சாகத்துடன் இந்து முன்னணி பேரியக்க கிளைகளை விதைத்தார். இன்று தமிழகம் முழுவதும் ஆல்போல் தழைத்து, அருகு போல இந்து முன்னணி வேரோடியிருப்பதற்கு காரணம் கோபால் ஜி தான் என்றால் அது மிகை அல்ல. அவர் வேறு, இயக்கம் வேறு அல்ல. இந்துமுன்னணி தான் கோபால் ஜி; கோபால் ஜி தான் இந்து முன்னணி.

அவரைப் போலவே செயல்திறம் மிக்க, எதிர்பார்ப்பற்ற, தேசபக்தி கொண்ட எண்ணற்ற மாவீரர்களை, தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக இந்துமுன்னணி வளர்ந்திருக்கிறது. தேசத்திற்காக, தர்மத்திற்காக தனது வாழ்வையே அர்பணமாக்கிக் கொண்டவர் கோபால் ஜி. தனக்கென ஒரு வாழ்க்கை என்ற ஒன்று அவரிடத்தில் இல்லை. இயக்கமே அவரது வீடு. தொண்டர்களே அவரது உறவினர்கள்.

அவரது வாழ்வே நமக்கு பாதை. இயக்கப்பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி.