வருகிறது பிராணிகளுக்கான ரத்த வங்கி வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு!

மனிதர்களுக்கு ரத்த சேதம் ஏற்படுகிறது. விபத்தினாலோ  உடல் நல குறைபாட்டினா

லோ ஏற்படும் இந்த சேதாரத்தை தணித்து ரத்தத்தை உடலுள் ஏற்ற விரிவான ஏற்பாடுகள் உள்ளன. மனித ரத்த வங்கிகள் மாவட்ட,  வட்டத் தலைநகரங்களிலும் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. மனிதர்களைப் போல மிருகங்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ரத்த சேதம் ஏற்படுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, மனிதர்களுக்கு உதவ மனித ரத்த வங்கி பரவலாக இருப்பதைப் போல, பிராணிகளுக்கு உதவ பிராணி ரத்த வங்கி இல்லை. இந்த குறைபாடு பெருமளவில் உணரப்படவும் இல்லை.

பசு பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் அரசு முனைப்புகாட்டி வருகிறது. பசு ஆர்வலர்களும் இதில் மிகுந்த ஈடுபாடு காட்டிவருகின்றனர். ஆநிரை  செழுமையாக  இருந்தால்தான் வேளாண்மை கொழிக்கும். பசுக்களைப் போற்றும் மரபு இன்றும் நீடித்து வருகிறது. இது எதிர்காலத்திலும் நிச்சயமாக நீடிக்கும்.

பசும் பால் சத்து மிகுந்தது என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆட்டுப்பாலும் சத்து மிக்கதுதான். ராஜஸ்தானில் ஒட்டகப்பால் பரவலாக புழக்கத்தில் உள்ளது. சில நோய்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது கழுதைப் பால் என்று கருதப்படுகிறது. இதனால் கழுதைப்பாலின் விலையும் உயர்ந்துவிட்டது. ஏனெனில் இது கிடைப்பது மிகவும் அருமை.

பிராணிகளுக்கு ரத்த வங்கி பரவலாக இருந்தால் ரத்தம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டா

ல் விரைவில் குணப்படுத்த முடியும். இதற்காக ஒடிஸா மாநிலத்தில் முன்னோடியான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒடிஸா வேளாண் தொழில்நுட்ப பல்கலைக் கழக வளாகத்தில் ரூ. 3.25 கோடி செலவில் கால்நடைகளுக்கான ரத்த வங்கி விரைவில் அமைக்கப்பட இருக்கிறது என்று அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுரேந்திரநாத்  தெரிவித்துள்ளார்.

பிராணி ரத்த வங்கி அமைப்பதற்கான கருத்துரு தேசிய வேளாண்மை மேம்பாட்டு ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலிடம் பச்சைக்கொடி காட்டியவுடன் பிராணி ரத்தவங்கி செயல்படத் தொடங்கிவிடும். இந்த பிராணி ரத்தவங்கி மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து அமைக்கும் மகத்தான திட்டம். மொத்த செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும் எஞ்சிய 40 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கும்.

கன்று ஈனும்போதும் இதர நோய்களின் பாதிப்பின்போதும் தகுந்த தருணத்தில் போதுமான அளவு ரத்தம் செலுத்துவதை உறுதிப்படுத்தினால் கால்நடைகளின் உயிர் இழப்பை பெருமளவு தவிர்த்துவிடலாம் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஒடிஸாவில் தொடங்கப்பட இருக்கின்ற பிராணி ரத்தவங்கி, பாரதம் முழுவதும் விரிவாக்கப்பட வேண்டும். மனிதர்கள் தாமாகவே முன்வந்து ரத்தத்தை தானமாக அளிப்பதைப் போல பிராணிகள் சுயமாக முன்வந்து ரத்தத்தை தானமாக அளிப்பது சாத்தியம் அல்ல. எனவே ரத்ததானம் செய்யவேண்டும் என்று மனிதர்களை வற்புறுத்தும் வகையில் பரப்புரை நிகழ்த்தப்படுவதைப் போல ஆரோக்கியமான பிராணிகளை ரத்ததானம் செய்ய விவசாயிகள் அழைத்துவர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடுதழுவிய அளவில் பரப்புரை மேற்கொள்ளப்படுவது விரும்பத்தக்கது.