தமிழர்களின் இரண்டு வியாதிகள்!

இரண்டு பெரும் மனோவியாதிகள் தமிழகத்தில் இப்போது மிக வேகமாகப் பரவி வருகின்றன. நம் பண்பாட்டிற்கு ஒரு சிறிதும் பொருந்தாத இவை, தீவிரத் தொற்று வியாதிகளும் கூட! இவற்றை எதிர்க்கும் எதிர்ப்புச் சக்தி தமிழர்கள் மனத்தில் உடனடியாக ஏற்படவேண்டும். இல்லாவிட்டால் நம் கலாச்சாரம் பாழாகும்.

ஒரு வியாதியின் பெயர் தற்பெருமை, இன்னொரு வியாதியின் பெயர் முகஸ்துதி.

தற்பெருமை என்கிற வியாதி ஏன் தோன்றுகிறது? ‘உன் வேலைதான் உன்னைப் பற்றிப் பேசுகிறதே, அது போதாதா? நீ வேறு ஏன் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்?’ என்று வினவும் ஒரு பொன்மொழி உண்டு. தம் ஆற்றலின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் தங்களைப் பற்றித் தாங்களே பேசிக் கொண்டிருப்பார்கள்.

தற்பெருமை என்பது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு தான். தன் திறமை காரணமாக, தன் ஆற்றல்கள் காரணமாக, பிறர் தன்னைப் பற்றி மதிக்கிறார்கள் என்ற திட சித்தம் உடைய ஒருவன் உண்மையைச் சொல்லப் போனால் போராற்றல் படைத்த ஒருவன் பிறர் தன்னை மதிக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிக் கடுகளவும் கவலை கொள்வதுமில்லை. அவன் அமைதியாகவும் பொறுமையாகவும் தன் அலுவலை மட்டும் செய்துவிட்டுப் போகிறான். அவன் செய்த அலுவலின் நேர்த்தியும் ஒழுங்கும் கச்சிதமும் அவன் பெருமையைப் பேசாமல் பேசிக் கொண்டிருக்கின்றன.

‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்று வள்ளவர் அடக்கத்தின் சிறப்பைப் பற்றி அடக்கத்தோடு பேசிச் சொல்கிறார். 1330 குறட்பாக்களை எழுதிய வள்ளுவர் ஒரு குறட்பாவில் கூடத் தம்மைப் பற்றிப் பேசவில்லை. அவ்வளவு அடக்கம் அவருக்கு. தாம் இயற்றிய 133 அதிகாரங்களில் தான் அவர் கவனம் செலுத்தினாரே தவிர, வேறு எந்த அதிகாரத்திற்கும் அவர் ஆசைப்பட்டதாய்த் தெரியவில்லை. அவர் தம்மைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அவர் இயற்றிய நூலின் பெருமை மறைமுகமாக அவர் எத்தனை பெரியவர் என்பதைத்தான் இத்தனை நூற்றாண்டுகளாகப் பேசிக் கொண்டிருக்கிறது.

குறைகுடங்கள்

கம்பர், வால்மீகி ராமாயணம் என்ற பாற்கடலைக் குடிக்க ஆசைப்படும் பூனை நான். ஏதோ என்னால் இயன்ற அளவு எழுதிப் பார்க்கிறேன்” என்ற அளவு கடந்த அடக்கத்தோடு எழுதிச் செல்கிறார். கம்பர் ஒரு சிறிதும் தளும்பாத நிறைகுடம். இன்று நிறைகுடங்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துவிட்டது. கூத்தாடும் குறைகுடங்களின் காட்டுக் கூச்சல் காதைப் பிளக்கிறது.

கொஞ்ச காலத்திற்கு முன்புவரை அடக்கம் மிகப்பெரிய நற்குணமாகப் போற்றப்பட்டு வந்தது. சமீப காலமாக அடக்கத்தோடு இருப்பவர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடக்கமானவர்களிடம் (அதாவது காலஞ்சென்றவர்களிடம்தான்) அடக்கம் இருந்தது. இப்போது உள்ள சாதனையாளர்களில் பலரிடம் அந்த நற்குணம் காணாமல் போய்விட்டது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பலர் தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திப் பேசிக்கொள்கிறார்கள். மற்றவர்கள் கிரீடத்தை எடுத்துத் தங்கள் தலையில் வைக்கும் வரை அவர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை. தாமே மகுடங்களைத் தாங்கள் தலையில் சூட்டிக் கொண்டு அழகு பார்த்துக் கொள்கிறார்கள். இசைத்துறை, நடிப்புத்துறை, எழுத்துத்துறை எல்லாவற்றிலும் சுயமோகிகள் ஆணவத்தோடு பேசும் கர்வம் நிறைந்த பேச்சுக்களை நிறையவே கேட்க முடிகிறது. பக்குவமும் மனமுதிர்ச்சியும் உடைய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்தப் பிரமுகர்களின் அற்பப் பெருமைகளைக் கேட்டுத்  தங்கள் மனத்துக்குள் நகைத்துக் கொள்கிறார்கள்.

பரிதாபத்துக்குரியவர்கள்

இந்தத் தற்பெருமைச் சிகாமணிகளின் நோக்கம் தான் என்ன? தங்கள் பெருமைகளை வானளாவச் சொல்லி தாம் உயர்வானவர்கள் என்பதைத் தாங்களே மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் என்ன பரிதாபம்! தற்பெருமைப் பேச்சைக் கேட்கும் யாரும் அந்தத் தற்பெருமையாளரை ஒரு சிறிதும் மதிப்பதில்லை. சிலர் இப்படியுமா ஒருவன் கர்வத்தோடு பேசுவான்!’ என அந்த நபரைக் குறித்து கடுஞ்சீற்றம் அடைகிறார்கள். வேறுசிலர் ‘ஐயோ பாவம்!’ என்று அவரைக் குறித்து இரக்கம் கொள்கிறார்கள். என்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்ற சுயநலக் கண்ணோட்டத்திலாவது தற்பெருமையைத் தவிர்ப்பது நல்லது.

இன்று முன்னெப்போதையும் விட அதிகமாக பத்திரிகைகளிலும் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் நேர்காணல்கள் இடம் பெறுகின்றன. நாம் மதிக்கும் சாதனையாளர்கள் தாங்கள் நடந்துவந்த பாதை குறித்து அடக்கத்தோடு பேசினால் நாம் அவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பு கூடுகிறது. ‘நானே இந்திரன், சந்திரன். என்னைப் போல் யாருமில்லை’ என அவர்கள் பேசினால் பொதுமக்கள் மத்தியில் அவர்கள் மதிப்பு வெகுவாய் குறைந்து போகிறது. ‘பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று சங்கப் புலவன் என்ன அழகாகப் பாடிவிட்டுப் போயிருக்கிறான்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வயதான ஒரு கிழவர் தமிழில் வாழ்ந்துவருகிறார், திருக்குறள் என்ற வடிவில் புத்தகமாக, ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்ற அந்த வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறாரே, அதை மட்டும் அனைவரும் அனுசரித்தால் போதுமே! அனுசரிப்பவர் மதிப்பு பல மடங்கு கூடுமே!

மகாபாரதத்தில்  ஒரு சம்பவம் வருகிறது. போருக்குப் போய் கர்ணனைக் கொல்லாமல் திரும்பிவந்த அர்ஜுனனைப் பார்த்து, ‘உன் காண்டீபம் என்ன வில்லா, இல்லை புல்லா!’ என்று தர்மபுத்திரர் பழித்துப் பேசுகிறார். காண்டீபத்தைப் பழிப்பவர்களைக் கொலை செய்வது என்று அர்ஜுனன் முன்பே சபதம் செய்திருந்தான். தன் சபதப்படி யுதிஷ்டிரரைக் கொல்ல வேண்டுமே என்று கலங்குகிறான் அர்ஜுனன். எப்போதும் அவன் வரும் ஸ்ரீகிருஷ்ணர், யுதிஷ்டிரரை ஏக வசனத்தில் மரியாதைக் குறைவாகப் பேசுமாறு அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார். தர்ம சாஸ்திரப்படி வயதில் பெரியவர்களை ஏக வசனத்தில் மரியாதைக் குறைவாகப் பேசுவது அவர்களை கொலை செய்வதற்குச் சமானம். அர்ஜுனன் அவ்விதமே பேசுகிறான். பிறகு அப்படிப் பேசிவிட்டோமே என்று தாளாத துக்கத்தில் தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ள முனைகிறான். அப்போதும் வழி சொல்கிறார் கிருஷ்ணர். கொஞ்சம் உன்னைப் பற்றி நீயே தற்பெருமையாகப் பேசிகொள். அது தற்கொலைக்குச் சமானம்” என்கிறார். அர்ஜுனனும் அவ்விதம் பேசி அமைதி அடைகிறான் என்கிறது புராணம். தற்பெருமை தற்கொலைக்குச் சமம் என்பதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் எப்போது நாள்தோறும் எத்தனை நபர் நபர் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்!

இந்தத் தற்பெருமை வியாதியைத் தடுப்பது எப்படி? அதற்கு ஒரு வழி இருக்கிறது. தற்பெருமை பேசுபவர்கள் நாள்தோறும் காலையில் ஓரிரண்டு தன்னடக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு, ஒரே ஒரு குவளை தன்னம்பிக்கைச் சாறையும் தொடர்ந்து அருந்த வேண்டும். தற்பெருமை என்கிற இந்தத் தொற்றுவியாதி உடனே குணமாகிவிடும்.

அருவருப்பான துதி

இதேபோல் இன்னொரு தோற்றுநோயும் இருக்கிறது. முகஸ்துதி என்பது அந்த வியாதியின் பெயர்!

வார்த்தைகள் அதன் பொருளை இழந்து நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிற காலம் இது. மேடைகளில் அடுத்தவர்களைப் பற்றி அளவுகடந்த வானளாவப் பேசப்படும் புகழ்பொழிகளை நிறையக் கேட்கிறோம். புகழப்பட்டவர்கள் அந்த வார்த்தைகளுக்குத் தகுதியானவர் அல்ல என்பது சொல்பவருக்கும் தெரிகிறது. கேட்பவர்களுக்கும் தெரிகிறது. ஆனாலும் வார்த்தைகளின் மேல் ஒரு சிறிதும் மரியாதை இல்லாமல் புகழ்மொழிகள் அள்ளி வீசப்படுகின்றன.

ஓர் எழுத்தாளரைப் போய்ச் சந்தித்தேன். அவர் அரைமணி நேரம் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். நான் அடைந்த எரிச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. என் முகத்தைப் பார்த்து என் எண்ணத்தைப் படித்துவிட்டார் அவர். அடடா! அரைமணி நேரம் நானே என்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேனே! ரொம்பவும் அலுப்பாகத் தான் இருக்கும் உங்களுக்கு சரி. நான் நிறுத்திக் கொள்கிறேன். இனி ஓர் அரைமணி நீங்கள் என்னைப் பற்றிப் பேசுங்கள்!’ என்றார் அவர்! தம்மைப் பற்றித் தாமே பேசுவதிலும் தம்மைப் பற்றி பிறர் பேசக் கேட்பதிலும் அலுப்பே அடையாத அவரது குணத்தைப் பற்றி என்னவென்பது!

சிலர் மேடைகளைத் தந்திரமாகப் பயன்படுத்திக்கொள்வதை நிறையவே பார்க்கிறோம். யாராவது ஒரு பிரமுகர் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார் அல்லவா? அந்தப் பிரமுகரிடம் பேச்சாளருக்கு ஏதாவது ஆதாயம் பெற வேண்டியிருக்கும். உடனே பலரறிய மேடையிலேயே சற்றும் கூச்சமில்லாமல், கேட்பவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற யோசனை சிறிதும் இல்லாமல் தலைமை தாங்குபவர் தலையில் உச்சத்துக்கு ஐஸ் வைப்பார். சரி, அவராவது என்னை இப்படியெல்லாம் மேடையில் தாறுமாறாய்ப் புகழாதீர்கள் என்று எச்சரிப்பாரா! என்ன கொடுமை! அவர் உப்புப் பெறாத அந்தத் தகுதியற்ற புகழ் மொழிகளை ஏதோ தமக்கு வழங்கப்படும் சான்றிதழ் மாதிரி கேட்டுப் பூரித்துக் கொண்டிருப்பார். இதற்கு இன்னும் ஒரு படி மேலே நடக்கும் சங்கதிகளும் உண்டு. என்னைக் கொஞ்சம் தாராளமாகப் புகழப்பா என மேடையேறுவதற்கு முன்னாலேயே ரகசிய ஒப்பந்தங்கள் நடைபெறுவதும் உண்டு. மனிதர்கள் அற்பத்தனமாக நடந்து கொள்வது என்று தொடங்கிவிட்டால் அதற்கு ஓர் எல்லை உண்டா என்ன?

இவரல்லவோ பிரமுகர்!

ஒரு பிரமுகர் கூட்ட அழைப்பிதழில் தம் பெயர் பெரிய எழுத்துக்களில் இடம் பெறவில்லை என்ற காரணத்தால் அந்தக் கூட்டத்திற்கு வராமலேயே இருந்துவிட்டார். இது போகட்டும். வேறொரு பிரமுகர், தம்மோடு பேசும் இன்னொரு பேச்சாளர் பெயரையும் தம் பெயரைப் போட்டது போலவே பெரிய எழுத்தில் போட்டதற்காகக் கோபித்துக் கொண்டு கூட்டத்தை நிராகரித்துவிட்டார்!

கூட்டத்திற்கு தலைமை வகித்த ஒருவர், ஒரு பேச்சாளரைப் பற்றி மட்டும் ஏராளமான புகழ்மொழிகளை அள்ளி வீசினார். இன்னொரு பேச்சாளரைப் பற்றி அவர் கண்டுகொள்ளவே இல்லை. கூட்டம் முடிந்த பிறகு அந்த இன்னொரு பேச்சாளர் என்னைப் பற்றியும் நீங்கள் நாலு வரி பாராட்டிப் பேசியிருக்கலாம் என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். அதற்கு அந்தத் தலைவர் சொன்னதாவது: நான் என்ன மாட்டேன் என்றா சொல்கிறேன். அந்த ஆள் தன்னைப் பற்றி எப்படி எப்படியெல்லாம் புகழ வேண்டும் என்று முன்கூட்டியே என்னிடம் எழுதிக் கொடுத்தார். நீங்கள் அதுபோல் எதுவும் எழுதிக் கொடுக்கவே இல்லையே!” என்றார்.

‘தோன்றில் புகழொடு தோன்றுக’ என்றார் வள்ளுவர். புகழ் என்பது ஒருவர் செய்த பல அரிய செயல்களால் தானாகவே தோன்றவேண்டும். அடுத்தவர்களைப் பாராட்டச் சொல்லிப் புகழைத் தோற்றுவித்துக் கொண்டால் அது தோன்றிய மறுகணமே மறைந்துவிடும். காந்தியும் வள்ளலாரும் தம்மைப் பற்றி அடுத்தவர்களைப் புகழச் சொல்லியா புகழ் அடைந்தார்கள்? அவர்கள் செய்த செயற்கரிய செயல்கள் அல்லவா அவர்களுக்குப் புகழைக் கொண்டு தந்தன! புகழ் அப்படி இட்டுக்கட்டி  ஏற்படுத்தக் கூடியதா என்ன? அப்படியானால் அது எத்தனை நாளைக்கு நிலைக்கும்?

நாம் யாரையும் மட்டுமீறிப் புகழவும் வேண்டாம். நம்மை யாரேனும் அளவுகடந்த புகழ்ந்தால் அதை நாம் அனுமதிக்கவும் வேண்டாம்.

தற்பெருமை என்ற வியாதியிலிருந்தும் முகஸ்துதி என்ற வியாதியிலிருந்தும் தமிழர்கள் முழுமையாகக் குணம் பெற்றாலன்றி உலக அரங்கில் தமிழர்களின் பெருமை உயராது.

(கட்டுரையாளர் அமுதசுரபி ஆசிரியர்)