உலகு தழுவும் பாரதம்

பாரதம் ஜூன் 30 நள்ளிரவில் சரக்கு – சேவை வரி (GST) யை நாடு தழுவிய அளவில் அமல் செய்யும்போதே அமெரிக்கா தானும் அதுபோன்று வரி விதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. பிரான்ஸ் முதலிய ஒற்றைப்பட்டையான நாடுகளில் GST அமலில் இருப்பது பெரிய விஷயமல்ல. பாரதம் போன்ற மொழிகளும் மாநிலங்களும் பொருளாதார அடுக்குகளும் நிறைந்த தேசம் ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற கருத்துடன் களமிறங்கி இருப்பது உலகின் கவனத்தை, ஆர்வத்தை கவர்ந்துள்ளது. அதற்கு அமெரிக்கா ஒரு உதாரணம்.

பாரத விவசாயிக்கு முள் முருங்கை,  நாட்டு உடை (கருவேலம்) என்ற மரங்களின் பயன்கள் அத்துபடி. வறண்ட நிலத்தில் பசுமைப் போர்வை தருவதுடன் நீரை உறிஞ்சி வற்றடிக்காத வகை மரங்கள் இவை என்று அவருக்குத் தெரியும். இப்போது துனீஷியா, மொராக்கோ, அல்ஜீரியா விவசாயிகள் இந்த மரங்களை பயிர் செய்து தங்கள் தேசங்கள் பாலைவனமாவதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி பார்க்கிறார்கள். இதை அவர்கள் தாங்களாக செய்யவில்லை. ‘அசோகா குரூப்’ என்ற தன்னார்வ அமைப்பில் பயிற்சி பெற்ற சாரா தௌமி என்ற துனீஷிய பெண்மணி அந்த நாடுகளின் விவசாயிகள் மத்தியில் இந்த பாரத விருட்சங்களின் அற்புதங்களை எடுத்துக்கூறி பயிர்செய்து காட்ட வேண்டியிருந்தது. இந்த வகை மரங்கள் 100 மீட்டர் வரை வேர் பாய்ச்சி நீரை மேலே கொண்டுவந்து பசுமை படர்த்துவதுடன் மண்ணை மலடாக்காமல் காப்பாற்றும் நுண்ணுயிர்களையும் பல்கிப் பெருகச் செய்பவை. அதாவது மூன்று தேசங்கள் பாலைவனமாகாமல் தப்பித்துக் கொள்வதற்கு பாரத விவசாயி சந்தடியில்லாமல் வழி காட்டுகிறார்.

விவசாயத்தில் மட்டுமல்ல, விண்வெளி அறிவியலிலும் பாரதம் உலகின் முன்னணி அமைப்பான அமெரிக்காவின் நாசாவிலேயே எப்படிப்பட்ட பங்குபணி ஆற்றுகிறது தெரியுமா?  நிலாவில் மனிதன் காலடி எடுத்து வைத்தபோது நம்மூரில் ‘யாராவது ஒரு கேரளாக்காரர் அங்கே டீக்கடை நடத்திக் கொண்டிருக்கக்கூடும்’ என்று நகைச்சுவை ததும்ப அரட்டையடித்தவர்கள் உண்டு. உண்மையிலேயே செவ்வாய் கிரகத்திற்கு ‘ஸ்பிரிட்’, ‘ஆப்பர்சூனிட்டி’ என்ற விண் கலங்களை ஏவி அவற்றை வெகு ஜாக்கிரதையாக செவ்வாயின் வளி மண்டலத்தில் இறக்கி சேதமில்லாமல் அவற்றை அங்கே தரையிறங்கச் செய்த தொழில் நுட்பத்தின் ‘மூளை’கள் யார் தெரியுமா? பிரசூன் தேசாய், கண்ணா ராஜன் போன்ற பாரத வம்சாவளி அன்பர்கள்தான்.  அந்த அசகாய சூரத்தனத்தை உலகமே அப்போது கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. லிட்டில்இந்தியா டாட் காம் என்ற இணையதளத்தில் இதைப் பதிவு செய்திருக்கிறார் லவீனா மெல்வானி என்ற பெண்மணி (பாரதமே செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய மங்கல்யான் அதற்கு விதிக்கப்பட்ட மூன்று மாத ஆயுளையும் தாண்டி 1,000 நாட்களாக அந்த கிரகத்தை வலம் வந்தபடி செய்திகள் அனுப்பியவண்ணம் இருக்கிறது என்ற கூடுதல் தகவல் பாரதிய அறிவியலார் எட்டியுள்ள சிகரங்களை சுட்டுகிறது).

இப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்று நம்பக்கூட முடியாது. எதை? தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுபிடித்த உலகின் முதல் ஒலிப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்த முதல் ஒலி அக்னி மீளே புரோகிதம், யக்ஞஸ்ய…” என்று தொடங்கும் உலகின் ஆதி இலக்கியமான ரிக் வேத மந்திரம்தான். அதை உச்சரித்தவர் அந்த  நாளில் ஐரோப்பாவில் பிரபலமாக இருந்த மாக்ஸ் முல்லர். இது நடந்தது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில். நம்புகிற மாதிரி இல்லை தானே? ஆனால் இதை நான்காண்டுகளுக்கு முன் பாரதம் வந்திருந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஹிந்து ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குநர் சௌநக ரிஷி தாஸ். இந்த பெயர் உங்களை ஏமாற்றக்கூடும். ஆனால் இந்த பெயருக்குரியவர் அயர்லாந்து கத்தோலிக்கர். ஹிந்துவாகி இந்தப் பெயரை சூட்டிக் கொண்டவர். 2013 ஆகஸ்டு 23 தேதியிட்ட ‘த ஹிந்து’ நாளிதழ் வெளியிட்ட செய்தி இது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பாரத ராணுவ பட்டாலியன்கள் ஐநாவின் அமைதிப்படையாக ஆப்பிரிக்க நாடுகளில் பாசறை அமைத்து தங்குவது பழைய செய்தி. இதோ சற்று தெம்பான தகவல்:  உள்நாட்டு யுத்தத்தினால் உருக்குலைந்த லெபனானுக்கு  பாரத ராணுவ வீரர்கள் வாயிலாக போய்ச் சேர்ந்த ‘ஜெய்ப்பூர் கால்கள்’ என்றால் கண்ணி வெடிகளில் கால்களை இழந்த ஏராளமான லெபனான் மக்களுக்கு வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. 2006ல் 145 பேருக்கு நடக்கும் சக்தி அளித்தது பாரதத்தின் ஜெய்ப்பூர் கால். மக்கள் ஆர்வம் காட்டவே 2007ல் பாரத ராணுவத்தினர் ‘ஜெய்ப்பூர் கால் கிளினிக்’களை அந்த நாட்டில் தொடங்க வேண்டியிருந்தது என்கிறார் மேஜர் சுமித் சர்மா (‘த ஹிந்து’ 2007, அக்டோபர் 31). அடுத்தது அங்கோலா. அங்கே அங்கோலா அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் ஜெய்ப்பூர் கால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையே நிறுவ வேண்டியதாயிற்று. அவ்வளவு தேவை. 27 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு யுத்தத்தில் சுமார் 5 லட்சம் அங்கோலா மக்கள் கால்களை இழந்திருந்தார்கள் (‘த ஹிந்து’ 2008 ஏப்ரல் 6).  இங்கே சற்று ‘ஜெய்ப்பூர் கால்’ புராணம்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ராம் சந்திரா என்ற தச்சரும் பிரமோத் கரண் சேட்டி என்ற முட நீக்கியல் நிபுணரும் இணைந்து உருவாக்கியது தான் ஜெய்ப்பூர் கால். உலகில் எத்தனையோ லட்சம் காலிழந்தவர்களுக்கு கை கொடுத்துள்ள ஜெய்ப்பூர் கால் லேசானது, லாகவம் தருவது. அதை அணிந்தவர் ஓடமுடியும், மரமேற முடியும், சைக்கிள் ஓட்டமுடியும். வேறு என்ன வேண்டும்? பாரத் மாதா கீ ஜெய் சொல்லத் தோன்றுகிறதல்லவா? (நமக்கெல்லாம் தோன்றும். ஆனால் போன வாரம் சில காங்கிரஸ் பெரும்புள்ளிகளும் கம்யூனிஸ்டு பிரமுகர்களும் பாரத ராணுவத்தினரை நாக்கில் நரம்பின்றி தூற்றினார்களே, அவர்களுக்கும் தோன்ற வேண்டாமா?).

சுற்றுலாப் பயணிகள் பாரதத்திற்கு வருவது அதிகரித்திருப்பதாக அவ்வப்போது புள்ளிவிவரம் வெளியாகிறது. அதில் ‘சுகாதார சுற்றுலா’ என்ற பெயரில் வருபவர்கள் குறிப்பாக அதிகரிக்கிறார்கள் என்பது புள்ளிவிவரத்தின் உள்விஷயம். அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வருகிற சுற்றுலாப் பயணிகள் நேரே கேரளா சென்று மாதக்கணக்கில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று தெம்பாக நாடு திரும்புகிறார்கள். சுஸ்ருதரும் சரக முனியும் சித்தர்களும் உருவாக்கிய பாரத சிகிச்சை முறையில் உலக மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்பதுதான் விஷயம். சமீப காலமாக யோகா பிரம்மாண்டமான அளவில் உலக மக்களை வளைத்துப் போட்டு வருகிறது. அவர்கள் தங்கள் நாடுகளிலேயே யோகா செய்து பதஞ்சலி முனிவரின் பரம பக்தர்கள் ஆகிவிடுகிறார்கள். குறிப்பாக தியானம். சிரியா உள்ளிட்ட ஜிகாதி பயங்கரவாதத்தால் கொடூரமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்கள் பீதியில் உறைந்து போயிருந்தார்கள். பாரதத்தின் யோக நிபுணர்கள் அவர்களின் மனதைத் தேற்றி வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வரும் செய்தி. பாரதத்தில் ஏதோ இருக்கிறது இல்லையா? வாழ்வதற்குத்தான் வகை கிடைக்கிறது என்பதல்ல, உயிரை விடுவதற்கும் பிருந்தாவன், காசி, ஜகந்நாதபுரி என்று திருத்தலங்களே உண்டு. ஜெர்மனியில் பிறந்த ஹில்டகார்டு ஜேக்கப் (வயது 48) என்ற பெண்மணி புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர். ஒரிஸ்ஸா வந்து புரி நகரில் ஜகந்நாதர் திருவடியில் உயிரை விட ஆசைப்பட்டார். புரியில் தங்கினார். 2004 டிசம்பர் 19 அன்று அவரது ஆசை நிறைவேறியது. அதுமட்டுமல்ல, ஹிந்துக்களைப் போல தன் சடலத்தை தகனம் செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அதுவும் நிறைவேறியது.

சாவுக்கு மட்டுமல்ல, சாகசத்திற்கும் பாரதமே கதி என்று உலகம் நினைத்து விட்டது போலிருக்கிறது. இருபது ஆண்டு யுத்தம் செய்து அமெரிக்காவை தோற்கடித்தது சின்னஞ்சிறு வியட்நாம். அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மேடம் பின் (Binh) 1977ல் பாரதம் வந்தார். அப்போதைய ராணுவ அமைச்சர் ஜகஜீவன் ராம் அவரை வரவேற்றார். பாரதம் வருகிற வெளிநாட்டு விஐபிகள் போல காந்தி சமாதி, குதுப்மினார், தாஜ்மஹால் என்று பட்டியலிடாமல் மேடம் பின், சத்ரபதி சிவாஜி மகாராஜா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தார். அரசு சிவாஜி சிலையை சுத்தம் செய்து இயந்திர ஏணி ஏற்பாடு செய்தது. மேடம் பின்னின் விருப்பம் நிறைவேறியது. ஒரு இந்திய மாவீரனிடம் உங்களுக்கு அப்படி என்ன ஒரு ஈர்ப்பு என்று சிலர் கேட்டபோது, மேடம் பின் கூறினார்: ‘அமெரிக்காவுக்கு எதிராக நாங்கள் போரிட்டபோது எங்கள் படைவீரர்கள் சத்ரபதி சிவாஜியின் வீர சாகசங்களை சொல்லிச் சொல்லி ஊக்கம் பெற்றார்கள். எப்படி சிவாஜியின் வீரர்கள் திமிர் பிடித்த முகலாயர்களை சின்னாபின்னமாக்கினார்கள் என்பதை எல்லாம் கேட்டுக் கேட்டு தேசபக்தி வளர்த்துக் கொண்டார்கள். குறிப்பாக அமெரிக்காவை தோற்கடிக்க சிவாஜியின் கொரில்லா போர்முறை எங்கள் படை வீரர்களுக்கு  மிகவும் உதவியது’.

ஜூலை முதல் வாரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் விஜயம் நல்லதொரு வாய்ப்பு. முதல் உலகப் போரின்போது பாரத வீரர்கள் துருக்கியிடமிருந்து இஸ்ரேல் நகர் ‘ஹைபா’வை மீட்டுக் கொடுத்த வீர வரலாற்றை நாமெல்லாம் பெருமிதத்துடன் நினைத்துப் பார்க்க அது ஒரு பொருத்தமான சந்தர்ப்பம். நாம் நினைத்துப் பார்ப்பது பற்றிப் பேசுகிறோமே தவிர இஸ்ரேல், பாரத வீரர்களின் அந்த வெற்றியை பாடப் புத்தகத்தின் வாயிலாக பல தலைமுறை இஸ்ரேலியர்களின் மனதில் பதியச் செய்து விட்டது.

உலக அரங்கில் பாரதத்தின் நற்பெயர் கொடிகட்டிப் பறக்கிறது என்பதை சொல்ல வரும் இந்தக் கட்டுரை பாரத அரசின் வெளியுறவுத் துறை வாயிலாக எத்தனையோ நாடுகளின் மக்களுக்கு எத்தனையோ விதங்களில் இதம் தரும் உதவி சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டாமல் முழுமை பெறாது. வளைகுடா நாட்டில் போர். இந்தியர்களை மீட்கச் சென்ற விவரமான மீட்பு அணி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கவர்ந்தது. எனவே இந்தியர்களை மட்டுமல்ல, வேறு 49 நாடுகளின் மக்களையும் அங்கிருந்து பத்திரமாக பாரத மீட்பு அணி வெளியே கொண்டுவர முடிந்தது சமீப கால உ தாரணம். எங்கள் தீவு நாட்டை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்திருக்கிறார்கள்,  காப்பாற்றுங்கள் என்ற குரல் வந்ததும் நடுக்கடலில் பாரத கப்பற்படையினர் ஒரு தோட்டா செலவில்லாமல் சக்தியைக் காட்டி கொள்ளையர்களை மடக்கி, மாலத்தீவு மக்களின் வயிற்றில் பாலை வார்த்தார்கள். இந்தோனேஷிய தீவுகளில் கடல் பூகம்பம் என்ற செய்தி வெளியாகும்போதே பாரத விமானப்படை விமானங்கள் நிவாரணப் பொருள்களுடன் அந்த நாட்டை நோக்கி பறந்து கொண்டிருந்த செய்தியும் வெளியானது உலகை திரும்பிப் பார்க்கச் செய்தது.

முத்தாய்ப்பு: இந்தக்  கட்டுரை வேண்டுமானால் இத்துடன் முடிந்திருக்கலாம். ஆனால் உலக மக்களையும் உலக நாடுகளையும் பரிவோடு, கனிவோடு பாரத நாடு தழுவிக் கொண்ட உதாரணங்களின் பட்டியல் முடிந்து விடவில்லை. அந்த சம்பவங்கள் நேற்று நடந்ததாக இருக்கலாம், என்றோ நடந்ததாக இருக்கலாம். ஆனால் ஒன்று, நாளையும் நடக்கும்.