ரூ.72-க்கு பசுஞ்சாண எரிபொருள்; தினம் 100 வாகனங்களுக்கு விற்பனை

பசுவின் சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விற்கப்படும் இந்தியாவின் முதல் பங்க் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா தாரத் நெடுஞ்சாலையில் உள்ளது. பனஸ்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்கீழ் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பசுமை வாயு தொழிற்சாலை உள்ளது. இதில் நாள்தோறும் 40 ஆயிரம் கிலோ அளவிலான பசுஞ்சாணத்திலிருந்து 550 முதல் 600 கிலோ வரையிலான இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இது பனஸ்கந்தா மாவட்டம் தீசா தாரத் நெடுஞ்சாலையில் உள்ள 3000 கியூபிக் மீட்டர் சுற்றளவு கொண்ட பசுமை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் இயற்கை எரிவாயு பங்க் இதுவே.

இதுகுறித்து பனஸ்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மூத்த நிர்வாகி பிரியங்க் மேத்தா கூறியதாவது: சுற்றுவட்டாரத்தில் உள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 140 முதல் 150 வரையிலான விவசாயிகள் வளர்த்துவரும் 2,800 பசுக்களின் சாணம் தினந்தோறும் இங்குக் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் சுமார் 40 ஆயிரம் கிலோபசுஞ்சாணத்திலிருந்து தினமும் 550 முதல் 600 கிலோ வரைஎரிவாயு தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே 2020-ஆம் ஆண்டில் ரூ.8 கோடி செலவில் 40,000 கிலோ பசுஞ்சாணம் கொள்ளளவு கொண்ட இந்த பசுமை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையம்தொடங்கப்பட்டது. அடுத்தகட்டமாக 2025-ஆம் ஆண்டு வாக்கில் இங்கு 10 லட்சம் கிலோ கொள்ளளவு கொண்ட டேங்க் நிறுவ பனஸ்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோ பசுஞ்சாண எரிவாயு ரூ. 72-க்கு விற்கப்படுகிறது.