உக்ரைன் மீது ரஷ்யா நடத்த இருந்த அணுகுண்டு தாக்குதல் தடுக்கப்பட்டது

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர விரும்பியது. அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டுவது, நேட்டோ அமைப்பில் சேருவது போன்றவை ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று புதின் தெரிவித்தார். அத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது போரும் தொடுத்தார்.

தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையில் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருந்ததாகவும், அதை பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்கள் தலையிட்டு தடுத்ததாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் 2 பேர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி சமரச முயற்சிகள் மேற்கொண்டார். ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார். அத்துடன் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வலியுறுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) புதினை சந்தித்த போது, ‘‘இது போருக்கான காலம் இல்லை’’ என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டது. அப்படி ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை நடத்தினால், கடந்த 1945-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசியதற்கு பிறகு நடக்கும் முதல் பேரழிவாகி விடும். அப்படி ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால், அதை எப்படி தடுப்பது என்று அதிபர் பைடன் உட்பட உலக தலைவர்கள் பலர் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர்தான் இந்த விஷயத்தில் புதினிடம் நேரடியாக பேசி அணுகுண்டு தாக்குதலை தடுத்து நிறுத்த உதவி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் பைடன் நிர்வாகம் கூறியது. சீனா உட்பட மற்ற நாட்டு தலைவர்களையும் தொடர்பு கொண்டு இந்த அச்சத்தை தெரிவித்தோம். அவர்கள் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசினர். அதேபோல் பிரதமர் மோடியும் அதிபர் புதினிடம் இதுதொடர்பாக பேசியுள்ளார். அவரதுஉதவியால் உக்ரைன் மீதான அணுகுண்டு தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.