ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டம் மூலம் பயன்பெற்றவர்களில் 48% பேர் பெண்கள்

ஏழை, எளிய மக்கள் சுகாதாரக் காப்பீட்டைப் பெறும் வகையில் மத்திய அரசு ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்துக்கு ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டம் (ஏபி-பிஎம்ஜேஏஒய்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏழைமக்கள் ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள முடியும். கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.81,979 கோடி மருத்துவக் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 6.5 கோடி பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர். இதில் 3.2 கோடி பேர் பெண்கள். அதாவது பயன் அடைந்தவர்களில் 48 சதவீதம் பேர் பெண்கள். ரூ.38,349 கோடிக்கு பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்று தேசிய சுகாதார ஆணையம் (என்எச்ஏ) தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் புற்றுநோய், கண் சிகிச்சை, காது, மூக்கு தொண்டை பிரச்சினை, குழந்தைப் பிறப்பு, பராமரிப்புக்காக அதிக அளவில் பெண்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக ஆயுஷ்மான் பாரத் திட்ட மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆயுஷ்மான் திட்டம் தொடக்கப்பட்ட பின்னர் ஏராளமான பெண்களுக்கு இந்தத் திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய ஸ்வாஸ்த்ய பீமயோஜ்னா எனப்படும் சுகாதாரத்திட்டம் அமலில் இருந்தது.

இந்தத் திட்டத்தின்படி குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு சுகாதாரஅட்டை வழங்கப்படும். ஆனால்ஆயுஷ்மான் திட்டத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனித்தனி அட்டை வழங்கப்படும். இதனால் பெண்கள், யாருடைய உதவியும் இன்றி தனியாகவே மருத்துவமனைகளுக்குச் சென்று இந்த அட்டையைக் காண்பித்து சிகிச்சையைப் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 32 கோடி பேர் பெயரைப் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.