ஒரே நாளில் 10 வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் மட்டுமே, வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று துவக்கப்பட்டது. எனினும், இந்த ரயில் ஏப்ரல் 4ம் தேதி வரை சென்னை சென்ட்ரல் – பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து வாரத்தில் புதன் தவிர மற்ற நாட்களில் மாலை 5:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், அதேநாள் இரவு 9:15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கமாக, பெங்களூரில் இருந்து காலை 7:50க்கு புறப்படும் ரயில், அதேநாள் நண்பகல் 12:25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், காட்பாடி நிறுத்தங்களில் நின்றுசெல்லும். ஏப்.,5ம் தேதி முதல் மைசூரு – சென்னை சென்ட்ரல் இடையே வழக்கமான சேவை துவங்கும். மைசூரில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12:25க்கு வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5:00க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், அதேநாள் இரவு 11:20 மணிக்கு மைசூரை அடையும். இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு விபரம் விரைவில் அறிவிக்கப்படும். சென்னையில் இருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

ஒரே நாளில் சென்னை-மைசூரு, ஆமதாபாத்- மும்பை, செகந்திராபாத்- விசாகப்பட்டினம், ராஞ்சி-வாரணாசி, ஜல்பைகுரி-பாட்னா, பாட்னா-லக்னோ, லக்னோ-டேராடூன் உட்பட மொத்தம் 10 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.