ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி நேற்று காஞ்சிபுரம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகர மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருக்கும்போது அரசை விமர்சிக்காமல் அனைவரும் இணைந்து செயல்பட்டு அவர்களின் துயர் துடைக்க வேண்டும். 2013-ம் ஆண்டே ‘நான் விரும்பும் சென்னை’ என்ற தலைப்பில் சென்னைையை பெரிய வெள்ளம் தாக்கும் என்று எச்சரித்திருந்தேன். அதை ஆளும் அரசுகள் பொருட்படுத்தவில்லை. புவி வெப்பயமாதலின் விளைவாக இன்னும் 5 ஆண்டுகளில் இதைவிட பெரிய வெள்ளத்தில் சென்னை சிக்கும். அடுத்து 3 ஆண்டுகளில் மேலும் இன்னொரு வெள்ளம் வர வாய்ப்புள்ளது.

சென்னையின் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எந்தெந்த பணிகளுக்கு இந்தத் தொகை செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதன் பிறகு அந்த இடங்களைப் பார்த்துவிட்டு இந்தத் திட்டங்கள் குறித்து பேசுகிறேன்.

சென்னைக்கு வெள்ளம் வந்தால் அவை இயற்கையாக வடிவதற்கு அடையாறு, கூவம் ஆறு, கொசத்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என 5 வழிகள் உள்ளன. இதுபோல் வேறு எந்த நகரத்திலும் எளிதில் வெள்ளம் வடிவதற்கான அமைப்புகள் இல்லை. ஆனாலும் சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு மேற்கண்ட அமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாததும், ஆக்கிரமிப்புகளுமே காரணம். ஒட்டு மொத்த மக்களும் சென்னையில் குவிவதை தடுக்க துணை நகரங்களை வேறு நகரங்களுக்கு அருகே அமைக்கலாம் என்றார்.