இலங்கையில் இந்து கோயில்கள் அழிப்பு: சிவஞானம் ஸ்ரீ தரன் எம்.பி. குற்றச்சாட்டு

இந்து சமயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்ததற்கான சான்றுகள் அதிகம் உள்ளன. இலங்கையை ஆட்சிபுரிந்த பல மன்னர்கள் இந்து கோயில்களை அமைத்து, வழிபாடுகளை நடத்தி உள்ளனர். குறிப்பாக, பல மன்னர்கள் சைவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில், தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும்வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், தொன்மையான இந்து கோயில்கள் சமீபகாலமாக அழிக்கப்படுவதாகவும், பவுத்தர்கள் வாழாத பிரதேசங்களில் புத்தவிகாரைகள் அமைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, மன்னார் திருக்கேதீசுவரம் கோயில், கன்னியா வெந்நீரூற்று விநாயகர் கோயில், நீராவிப் பிள்ளயார் கோயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி. அண்மையில் பேசும்போது, “இலங்கையில் இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அநுராதபுரம் மாவட்டத்தில் மட்டும் 117 இந்து கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், தமிழர்கள் அதிகம் வாழும்நெடுந்தீவு, கவுதாரிமலை பகுதிகளில் பவுத்த விகாரைகள் கட்டப்படுகின்றன” என்று தெரிவித்தார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக அந்நாட்டின் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.