‘ரிமோட் கன்ட்ரோல்’ துப்பாக்கிகள்: ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ரிமோட் கன்ட்ரோல்’ துப்பாக்கிகளை வாங்க, கான்பூர் நிறுவனத்துடன் 1,752 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ராணுவ அமைச்சகம் நேற்று கையெழுத்திட்டது.

நம் முப்படைகளில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், சுயசார்பு இந்தியா திட்டத்தின் வாயிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிய ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகளை வாங்க, கான்பூரில் உள்ள ஆயுத நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:

‘ராணுவத்தில் சுயசார்பு இந்தியா’ என்ற திட்டத்தின் அடிப்படையில், இந்திய கடற்படை மற்றும் கடலோர போலீசாருக்கு வழங்குவதற்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 12.7 மி.மீ., அளவிலான 423 ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள, ‘அட்வான்ஸ்ட் வெபன் எக்யூப்மென்ட் லிமிடெட்’ நிறுவனத்துடன் 1,752 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. எந்த சூழலிலும் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் உடைய இந்த துப்பாக்கிகள், கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் திறனை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.