உள்ளாட்சிகளில் தொழில் உரிம கட்டணம்; தமிழக அரசே நிர்ணயம்

தமிழகம் முழுவதும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப தொழில் உரிம கட்டணம் நிர்ணயித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தொழில் உரிமம் வசூலிக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில், துணை விதிகள் ஏற்படுத்தப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அவ்வகையில், நகர்ப்புறங்களில், குறைந்தபட்சமாக, 300 முதல் 5000 ரூபாய் வரை தொழில் உரிமக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதி 2023-ன் படி, தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப அரசே தொழில் உரிம கட்டணம் நிர்ணயித்துள்ளது. இது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு குறைந்தபட்சம், 1,800 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 20,000 ஆயிரம் ரூபாய்; பிற மாநகராட்சிகளுக்கு, குறைந்தபட்சம், 800 ரூபாய். அதிகபட்சமாக 15,000 ரூபாய்; நகராட்சிகளுக்கு குறைந்தபட்சம், 700 ரூபாய், அதிகபட்சமாக 10,000 ரூபாய்; பேரூராட்சிகளுக்கு குறைந்தபட்சம், 500 ரூபாய், அதிகபட்சமாக 7,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண முறை, வரும், ஏப்., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனால், உள்ளாட்சி அமைப்புகள் தோறும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர், வியாபாரிகள், வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு மாதம் முன்னரே விண்ணப்பித்து, உரிமம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.