‘டிஷ்யூ பேப்பர்’ ஆலைக்கு ‘டெண்டர்’ கோரியது டி.என்.பி.எல்.,

டி.என்.பி.எல்., நிறுவனம், ஆண்டுக்கு 34,000 டன் டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் திறன் உடைய தொழிற்சாலையை, திருச்சியில் அமைக்க உள்ளது. தற்போது, ஆலையில் பயன்படுத்தக்கூடிய டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் இயந்திரத்தை கொள்முதல் செய்ய, ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு பின், நாடு முழுதும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது உட்பட தனிநபர் சுகாதார பராமரிப்பு அதிகரித்துள்ளது.

இதனால், டிஷ்யூ பேப்பர் எனப்படும் திசு காகிதத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில், 10க்கும் குறைவான நிறுவனங்கள் மட்டுமே சர்வதேச தரத்தில், டிஷ்யூ பேப்பர் தயாரிக்கின்றன. இதையடுத்து, அந்த சந்தையில் களமிறங்கி, அதிக சந்தை பங்களிப்பை கைப்பற்ற, டி.என்.பி.எல்., நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டியில் ஆண்டுக்கு, 34,000 டன் டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் திறனில் ஆலை அமைக்கப்பட உள்ளது. திட்ட செலவு, 300 கோடி ரூபாய். தற்போது, சர்வதேச தரத்தில், 11 ஜி.எஸ்.எம்., முதல், 42 ஜி.எஸ்.எம்., வரை டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் இயந்திரத்தை நிறுவ, ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் ஆலை அமைக்கும் பணியை துவக்கி, இரு ஆண்டுகளில் முடிக்க, டி.என்.பி.எல்., நிறுவனம் திட்டமிட்டுள்ளது.