பயணியர் வாகன விற்பனை ஜனவரியில் 13% வளர்ச்சி

பயணியர் வாகன விற்பனை, கடந்த மாதம் புதிய உச்சத்தை எட்டியதாக, வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரியில் பயணியர் வாகனங்களின் விற்பனை, 13 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இம்மாதத்தில் மொத்தம் 3.93 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு ஜனவரியில் 3.47 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.

இதுகுறித்து, வாகன முகவர்கள் சங்க தலைவர் மனிஷ் ராஜ் சிங்கானியா தெரிவித்துஉள்ளதாவது: புதிய கார் மாடல்களின் அறிமுகம், எஸ்.யு.வி.,களுக்கு உள்ள அதிகப்படியான தேவை, திருமண காலம் உள்ளிட்ட காரணங்கள், பயணியர் வாகன விற்பனை வளர்ச்சிக்கு உதவின. விற்பனை அதிகரித்து இருந்தாலும், பயணியர் வாகனங்களின் சராசரி இருப்பு காலம், தற்போது 50 முதல் 55 நாட்கள் என்ற வரம்பில், கவலைக்குரியதாக உள்ளது.

சந்தையில் வாகனங்களுக்கான அசல் தேவையின் அடிப்படையில், வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்பு எண்ணிக்கையை சீர் செய்ய வேண்டும், முகவர்களுக்கு அதிகப்படியான வாகனங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

கடந்த மாதம், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர் ஆகியனவும் விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்