ராணுவ தயாரிப்பில் ஒத்துழைப்பு கிரீசுடன் ஒப்பந்தம் கையெழுத்து

ராணுவ ஆயுத வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தம், இந்தியா – கிரீஸ் பிரதமர்கள் இடையேயான சந்திப்பின் போது கையெழுத்தானது.

ஐரோப்பிய நாடான கிரீசின் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடில்லிக்கு நேற்று வந்த அவருக்கு, ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார்.

இரு தலைவர்களும், பல துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து விவாதித்தனர். இதைத் தொடர்ந்து, சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த சந்திப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இரு தரப்பு உறவுகள், சர்வதேச பிரச்னைகள் உட்பட பல விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தோ — பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக கிரீஸ் உள்ளது. இந்தோ – பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி அமைப்பில், கிரீஸ் இணைந்துள்ளது வரவேற்கக்கூடிய முன்னேற்றமாகும்.

ராணுவ ஆயுதத் துறையில் வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றில், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இரு நாட்டுக்கும் இடையேயான உறவில் புதிய சக்தி அளிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. பல்வேறு துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான குடியேற்றம் மற்றும் பயணம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதில் பரஸ்பரம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, நம் இளைஞர்கள் கிரீசுக்கு படிப்பதற்கும், வேலை வாய்ப்புக்கும் செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது