எங்களுக்கு பாடம் எடுக்காதீங்க’ மேற்கு வங்க அரசுக்கு பா.ஜ., பதிலடி

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில், ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த ஷாஜஹான் ஷேக் என்பவர், தன் ஆதரவாளர்களுடன் இணைந்து, பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, சந்தேஷ்காலியில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்ததால், அங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பா.ஜ., மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி நேற்று முன்தினம் சந்தேஷ்காலிக்குச் சென்றார். செல்லும் வழியில் தமகாலி என்ற இடத்தில், சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஜஸ்ப்ரீத் சிங் என்பவர் சுவேந்துவை தடுத்து நிறுத்தினார்.

நீதிமன்ற உத்தரவு இருந்தும் அவர் தடுத்து நிறுத்தியதால், பா.ஜ.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஐ.பி.எஸ்., அதிகாரி ஜஸ்ப்ரீத் சிங்கை பார்த்து, பா.ஜ.,வினர் காலிஸ்தானி என கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோவை, சமூக வலைதளத்தில் மேற்கு வங்க காவல் துறை வெளியிட்டது.

அதில், ‘நான் தலைப்பாகை அணிந்திருப்பதால், என்னை காலிஸ்தானி என அழைக்கிறீரா? இது குறித்து நான் நடவடிக்கை எடுப்பேன்’ என, ஐ.பி.எஸ்., அதிகாரி ஜஸ்ப்ரீத் சிங் கூறுவது போல் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பா.ஜ.,வின் பிளவுபடுத்தும் அரசியல் வெட்கமின்றி அரசியலமைப்பு எல்லைகளை மீறியுள்ளது.அவர்களை பொறுத்தவரை, தலைப்பாகை அணிந்தவர்கள் அனைவரும் காலிஸ்தானிகள்’ என, தெரிவித்துள்ளார்.

முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்து, சமூக வலைதளத்தில் பா.ஜ., வெளியிட்ட பதிவு: சந்தேஷ்காலிக்கு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும், எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியை, ஐ.பி.எஸ்., அதிகாரி ஜஸ்ப்ரீத் சிங் தடுத்து நிறுத்தியது ஏன்? முதல்வர் மம்தா பானர்ஜியின் ஏஜன்டாக அவர் செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது.

அவரது மதம் குறித்து பா.ஜ.,வினர் யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. விளம்பரம் தேடும் நோக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஜஸ்ப்ரீத் சிங் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். சந்தேஷ்காலி வன்முறைக்கு முக்கிய காரணமான ஷாஜஹான் ஷேக்கை, 50 நாட்கள் கடந்தும் போலீசார் இதுவரை கைது செய்யாதது ஏன்? சீக்கியர்களின் தலைப்பாகையை கழற்றி தெருவில் அடித்து விரட்டியவர்கள் தானே நீங்கள்? யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து எங்களுக்கு நீங்கள் பாடம் கற்றுத் தர வேண்டாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று, சந்தேஷ்காலியில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விளக்கமளிக்கும்படி, மேற்கு வங்க அரசு மற்றும் அம்மாநில டி.ஜி.பி.,க்கு, தேசிய மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த கமிஷன், இது குறித்து விசாரிக்க தனிக் குழுவையும் அமைத்துள்ளது.