பவானி ஆற்று நீர் சுவை மாறுகிறதா? பகுப்பாய்வில் தெரிந்த உண்மை

பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து, கோவை மேட்டுப்பாளையம், அன்னுார், திருப்பூர் மாவட்டம், அவிநாசி, குன்னத்துார், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில், அவிநாசி, குன்னத்துார், ஊத்துக்குளி உள்ளிட்ட இடங்களில் நீரின் சுவை மாறியிருப்பதாகவும், ‘உப்பு நீரை குடித்த உணர்வு தான் இருக்கிறது’ என, மக்கள் புகார் கூறி வந்தனர்.

இதையடுத்து, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வினியோகிக்கப்படும் நீரை சேகரித்து, சோதனைக்கு உட்படுத்தினர். உலக சுகாதார நிறுவன பரிந்துரைப்படி, பருகும் நீரில், உப்பின் அளவு குறைந்தபட்சம், 50- முதல், 150 டி.டி.எஸ்., இருப்பது ஏற்றுக்கொள்ள கூடியது. 350 டி.டி.எஸ்., வரை குடிக்க ஏற்ற நீர் என, பரிந்துரை செய்துள்ளது. பில்லுார் அணையில் இருந்து, வினியோகிக்கப்படும் நீரில், 100 டி.டி.எஸ்., மட்டுமே உள்ளது.

அதேபோல், குடிநீரில் உள்ள பி.எச்., அமிலம் – காரத்தன்மை அளவு, 6.5 முதல், 8.5 வரை இருக்கலாம்; தற்போது வினியோகிக்கப்படும் நீரில், 7.5 இருக்கிறது; இதனால், அந்நீர் பருக உகந்தது என்று பகுப்பாய்வு சோதனையில் தெரியவந்துள்ளது. வானில் இருந்து விழும் மழைநீர் எவ்வித மாசும் இல்லாமல், பூஜ்யம் டி.டி.எஸ்., என்ற அளவில் தான் நீர்நிலை, ஆறு, ஓடைகளில் விழும். அந்த நீர் பயணிக்கும் பாதையின் மண், நிலம் உள்ளிட்டவை தான், நீரின் தன்மையை மாற்றுகின்றன. நீர் வரத்து குறையும் போது சுவை மாறுபடுவது வழக்கம். இதனால், எவ்வித பிரச்னையும் இல்லை.

இருப்பினும், நீரை கொதிக்க வைத்து பருகுவதன் வாயிலாக சளி, காய்ச்சல் என்ற பேச்சுக்கு கூட இடமிருக்காது என்கிறார், பகுப்பாய்வு பிரிவைச் சேர்ந்த ஓர் அதிகாரி.