மக்கள் சுகாதாரத்தை பாதுகாப்பது முக்கியம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் கோர்ட் கருத்து

மக்களின் சுகாதாரம் மற்றும் சமூக நலன் பாதுகாப்பில் இருந்து விலகிச் செல்ல முடியாது. அவை பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியம்’ என, ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக, தமிழகத்தின் துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆலையை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த ஆலையை மூட, 2018ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், மீண்டும் ஆலையை இயக்க அனுமதி கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும், வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘அமர்வு குறிப்பிட்டதுபோல், ஆலையைத் தொடர்ந்து நடத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, நிபுணர் குழுவை அமைக்கலாம்’ என, வேதாந்தா குழு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் குறிப்பிட்டார்.

இதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு முன்பும் பல குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது. அதில் இந்த ஆலை மாசு ஏற்படுத்துகிறது என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. ஆனால், மாசு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை இந்த ஆலை எடுக்கவில்லை என, அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த ஆலையால் பொதுமக்களின் சுகாதாரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதனால், இந்த ஆலை தொடர அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து, மக்களின் சுகாதாரம் மற்றும் சமூக நலன் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் விலகிச் செல்ல முடியாது என, அமர்வு குறிப்பிட்டது.