மாணவர் பைலட் உரிமம் பெற்று பழங்குடியின பெண்கள் சாதனை

கேரளாவைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இருவர், முதன்முறையாக மாணவர்களுக்கான பைலட் உரிமம் பெற்றுள்ளனர். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முரளீதரன் – ஜெயலட்சுமி தம்பதி. கனி எனப்படும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பக்கவாத நோயால் முரளீதரன் பாதிக்கப்பட்ட நிலையில், ஜெயலட்சுமி வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

பிளஸ் 2 படித்த அவர்களது இளைய மகள் சிவலட்சுமி, விமானியாக வேண்டும் என்ற கனவுடன் கடந்த ஆண்டு அங்குள்ள விமானப் பயிற்சி பள்ளியில் தேர்வு எழுதினார்.

இதில், தேர்ச்சி அடைந்த இவர், கேரள அரசின் ‘ஸ்காலர்ஷிப்’ உதவியுடன் தற்போது மாணவர்களுக்கான விமானம் ஓட்டும் உரிமத்தை பெற்றுள்ளார். கேரளாவில் பழங்குடியின பெண் ஒருவர் மாணவர் பைலட் உரிமம் பெறுவது இதுவே முதன் முறையாகும். ”அடுத்ததாக வணிக விமான பைலட்டுக்கான உரிமம் பெறுவதை லட்சியமாக வைத்துள்ளேன்,” என, சிவலட்சுமி கூறினார். கோட்டயத்தில் வசிக்கும், உல்லாலா சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு பழங்குடியின பெண்ணும், சிவலட்சுமியை போலவே மாணவர் பைலட் உரிமம் பெற்றுள்ளார்.