மோடி அரசிற்கு நன்றி சொல்லி மகிழுது நரிக்குறவர் சமூகம்

தங்களுக்கு பழங்குடியினர் (ST) அந்தஸ்து அளித்துள்ள மோடி அரசுக்கு நரிக்குறவர் சமூகத்தினர் மனதார நன்றி தெரிவிக்கிறார்கள் இந்த இரு பேட்டிகளில்: தேவராயநேரி, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகில் உள்ளது. நரிக்குறவர் சமூகத்தினர் பெருந்திரளில் அரசு கட்டிக் கொடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். வீட்டில் பாரம்பரிய உடையும், வெளியில் ஏனையோரைப் போலவும் உடுத்துகின்றனர். பாசி, மாலை, மணிமாலை என கட்டி எடுத்துக் கொண்டு தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூருக்கு கடன் வாங்கி டிக்கெட் போட்டு போய் விற்று வருகின்றனர். சரியான நிதி மேலாண்மை இல்லாத காரணத்தாலும், தொடர்ந்து எதையும் செய்யாத காரணத்தாலும் மீண்டும் கடன், கடன் பிரச்சினையில் இருந்து மீள வழியில்லை. பழைய காலத்தில் மிருகங்களை வேட்டை ஆடியது போல இப்போதும் செய்வது இல்லை. படிக்க ஆர்வம் வந்திருப்பது தெரிகிறது. இது பற்றி சீதா மகேந்திரன் என்பவரிடம் கேட்டோம்:

narikkuravarஎன்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

NEWS – Narikuravar Education and Welfare Society நடத்திக் கொண்டு வருகிறோம். நானும் என் கணவர் மகேந்திரன் அவர்களுடன் இணைந்து எங்கள் சமூகம் முன்னேற எங்களால் இயன்றதை செய்து வருகிறோம்.

இந்த சமூகத்தில் என்ன முட்டுக்கட்டைகள் இருப்பதாக உணர்கிறீர்கள்?

பல விஷயங்கள் உள்ளன. எங்கள் சமூகத்தில் குடிப் பழக்கம் புரையோடிப் போய் இருக்கிறது. பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்ய கட்டாயப் படுத்துகின்றனர். மேலே படிக்க ஆர்வம் இருந்தாலும் அது ஊக்குவிக்கப் படுவது கிடையாது.

இதனால் என்ன பிரச்சினை?

படிக்கும் வேலை இல்லாததால் அவர்கள் கவனம் போதை, குடிப் பழக்கம் பக்கம் செல்கிறது. தேவை இல்லாத பிரச்சினைகளால் ஈர்க்கப்படுகின்றனர். காதலில் விழுந்து, தவறான உறவுகளில் சிக்கிக் கொள்கிறார்கள். குடும்பத்தை ஆரம்பிக்கும்போதே இவ்வாறு இருந்தால், குடும்பம் எப்படி தழைக்கும்?

படித்தவர்களே இங்கு இல்லையா?

இந்த தலைமுறையில் படிக்க ஆரம்பித்துள்ளனர். இங்கொன்றும் அங்கொன்றுமாக… ஆனால் வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது. நாங்கள் MBC ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ கீழ் வருகிறோம். எங்களை விட பலமானவர்களுடன் போட்டிபோட வேண்டியது உள்ளது.

உங்களின் கோரிக்கைகள் என்ன? (மகேந்திரன் பதில் சொல்கிறார்)

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் நாங்கள் தமிழகத்தில் உள்ளோம். நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு மற்ற மாநிலங்களில் வாழும் நரிக்குறவர் சமுதாயத்தினரை சரியாக ST என வகைப்படுத்தியது. தமிழகத்தில் அந்த அந்தஸ்து தரப்படவில்லை. ST தகுதி கிடைக்காமலேயே நாங்கள் தவிக்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டு, ST ஆக்கி, உருண்டோடிய 65 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்து சிறப்பு திட்டங்கள் மூலம் ஈடு செய்ய வேண்டும்.

மிருகங்களை வேட்டை ஆடுவது, தெருக்களில் ஊசி, மணிமாலை விற்பது தவிர வேறு எதுவும் தெரியவில்லை. முன்னோர்கள் படிப்பு வாசனையே தண்ணீர் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை ஆகியவை எந்த அளவிற்கு இருக்கிறது என நேரில் கண்டால் புரியும். ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியின் தரம் சரியில்லை; மைக்ரோ ஃபினான்ஸ் என்பது கனவு; இவர்கள் ஒழுங்கு படுத்தப்படவே இல்லையோ என தோன்றுகிறது. வீடுகள் சரியாக இல்லை. இப்படி உண்பதும் உறங்குவதுமே பிரச்சினை என்றால் எப்படி? மாறிவிட்ட சமூகத்தில் தங்கள் பாரம்பரிய திறன்களை எவ்விதம் காட்டுவது என திகைத்து நிற்கிறோம். பட்டா பிரச்சினை நிறைய இருக்கு. வங்கிக் கடன் கிடைத்தவர்களுக்கு அதை வைத்து திறமையுடன் நிர்வகிக்கும் திறன் இல்லை. வேலை நிமித்தம் ஊர் ஊராகச் சுற்றுகின்றனர். பிறகு எப்படி குழந்தை படிக்கும்? நலத் திட்டங்களை பெறுவது எங்ஙனம்? பொது இடங்களில் வேறுபடுத்திப் பார்க்கிறது சமூகம். இத்தனையையும் தாண்டி முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்றால் பெரிய சக்தி தேவைப்படுகிறது. இதற்கு உதவி செய்யும் நோக்கத்துடன், ST வகுப்பினருடன் இவர்களை சேர்க்க வேண்டும் என்ற நெடுநாளைய கோரிக்கைக்கு மத்திய சர்க்கார் செவி மடுத்துள்ளது. மோடிஜியின் தலைமையிலான சர்க்கார் இத்தனை சீக்கிரம் இதை சாதித்துக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. (சுமார் 65 ஆண்டுகள் போராட்டம் எனில், காங்கிரஸ் அரசுதானே ஆட்சி செய்தது?)

 

எங்கள் அடுத்த தலைமுறை செழிக்கும்

தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத்தின் தலைவர் தேவதாஸ் (ஓய்வு பெற்ற வங்கி ஊழியர், கரூர் வைஸ்யா வங்கி) அளித்த பேட்டி.

என்ன விதமான மைல்கற்களைத் தாண்டி வந்துள்ளது இந்த போராட்டம்?

சுமார் 65 ஆண்டு கால வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் திருச்சி தேவராயநேரியில் நரிக்குறவர்கள் வசிப்பதற்காக தனி குடியிருப்பு 1970ல் திமுகவால் ஏற்படுத்தப் பட்டது. நாடோடி சமூகமான எங்களுக்கு பேருதவியாக அது இருந்தது. ராஜ்யசபையில், திருச்சி சிவாவின் குரல் எங்களுக்காக ஒலித்தது. பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற தமிழக அரசு தன் பங்கினை செய்தது. ஆனால் முந்தைய மத்திய அரசு ஏனோ பாராமுகமாகவே இருந்தது. மோடி சர்க்கார் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகளில் இத்தகைய முடிவினை விரைந்து எடுத்ததற்கு நன்றி. எங்கள் சமூக மக்கள் கண்ணியமாக வாழ வகை ஏற்படும்.

ST பிரிவில் சேர்க்கப்பட்டதால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது?

1965ல் B.N. லோகுர் தலைமையிலான கமிட்டி எங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தது. பழங்குடியினருக்கான தேசிய கமிஷன் வடிவமைத்துள்ளபடி எங்களுக்கு ST அந்தஸ்து பெற சகல உரிமைகளும் உள்ளன. ஆந்திராவின் குருவிக்காரன், கர்நாடகத்தின் ஹக்கிபிக்கி, தமிழகத்தின் நரிக்குறவர்கள் ST பட்டியலில் மோடி அரசால் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதனால் படிப்பு, அரசாங்க வேலையில் SC/ST க்கு என்ன சலுகைகள் நலத்திட்டங்கள் உண்டோ அவை எங்களுக்கும் கிடைக்கும். குறைந்த மதிப்பெண் வாங்கினாலே வேலை கிடைத்துவிடும். ஏனெனில் எங்களுக்கு அது வாங்குவதே பெரும் சிரமம்.

படித்தவர்களுக்கு குறித்த நேரத்தில் பணி கிடைத்தால், அதுவே எங்கள் சமூகத்தவர்கள் மேலும் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்க தூண்டுதல் தரும். அடுத்த தலைமுறை செழிக்கும்.