தலாக் முறைக்கு 61 இஸ்லாமிய நாடுகளில் தடை பாரத முஸ்லிம் பெண் என்ன ஏமாளியா?

முஸ்லிம்கள் ஷரியத் சட்டத்தின் படிதான்  தங்களது வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். காமல் சிவில் கோடு எனப்படும் பொது குடிமைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் சட்ட வல்லுனர்களின் ஒருமித்த கருத்து. பல்வேறு உயர்நீதிமன்றங்களும் பாரதத்தின் சிகர அமைப்பான உச்ச நீதிமன்றமும் பொது குடிமைச் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று அறிவுறுத்தியும் கூட இது நனவாகாமலேயே இருந்து வருகிறது.thalak

முஸ்லிம்களுக்காக வளைந்து கொடுத்த அரசுகள் அதிகார பீடத்தில் இருந்த காலம் மாறிவிட்டது. அனைத்துத் தரப்பினருக்கும் சமநீதி வழங்கப்பட வேண்டும். இதில் எந்த பாரபட்சத்துக்கும் இடம் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள மோடி தலைமையிலான அரசு, இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த முற்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கௌடா, பொது குடிமைச் சட்டம், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொது குடிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுங்கள் என்று குஜராத் உயர் நீதிமன்றம் இடித்துரைத்தது.

இப்பின்னணியில் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த சாயிரா பானு என்ற முஸ்லிம் பெண், உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. சாயிரா பானுவுக்கு 32 வயது ஆகிறது. அவரது சொந்த ஊர் காசிப்பூர். அவர் அதிகம் படித்ததில்லை. 2015 அக்டோபர் 10 அன்று அவரது கணவர், அடுத்தடுத்து மூன்று தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டார். அவரது கணவர் அலகாபாத்தில் சொத்து வாங்கி விற்கும் வியாபாரியாக உள்ளார். புகுந்த வீட்டில் சாயிரா பானுவை அவரது நாத்தனார்கள் தொடர்ந்து இம்சைபடுத்தியுள்ளார்கள். வரதட்சணைக்காக அவரை சித்தரவதை செய்துள்ளார்கள். கட்டாயப்படுத்தி போதையில் ஆழ்த்தியுள்ளார்கள். இப்படிப்பட்ட மயக்க நிலையில்தான் அவர் விவாகரத்து செய்யப்பட்டுள்ளார்.

ஒரு தலாக்குக்கும் அடுத்த தலாக்குக்கும் இடையே குறிப்பிட்ட கால அவகாசம் இருக்க வேண்டும். மூன்று தலாக்குக்கும் இடையே குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் அவகாசம் இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இது மீறப்படுவதுதான்  சகஜமாக உள்ளது.

நிக்காஹ் ஹலாலா என்பதற்கு எதிராகவும் சாயிரா பானு குரல் எழுப்பியுள்ளார். ஒரு பெண் அடுத்தடுத்து மூன்று தலாக் கூறப்பட்டு விவகாரத்து செய்யப்பட்டால் அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். இதை கொடுக்காமல் இருக்க ஒரு வழி இருக்கிறது. விவகாரத்து செய்யப்பட்ட பெண் மற்றொருவரை திருமணம் செய்துகொண்டால் முந்தைய கணவர் ஜீவனாம்சம் அளிக்கவேண்டியதில்லை. இதனால் விவகாரத்து செய்வதுடன் நின்றுவிடாமல், விவகாரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு கட்டாயமாக மறுகல்யாணம் செய்துவைப்பதும் அதிகரித்து வருகிறது. இந்த நடைமுறைதான் நிக்காஹ் ஹலாலா.

பலதார மணம் என்பது சட்டத்துக்கு புறம்பானது. ஒரு ஆண், ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளை கொண்டிருக்கலாம் என்று ஆண்களுக்கு சாதகமான முறையில் ஷரியத் சட்டம் உள்ளது. இதனால் பெண்கள் சொல்லொண்ணா அநீதிக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். இந்திய அரசியல் சாசன பிரிவு 14ன் 15 முதல் 25 வரையிலான துணைப் பிரிவுகள்படி பலதார மணம் ஏற்புடையதல்ல. எனவே முஸ்லிம் ஆண்கள் 4 பெண்களை மணந்துகொள்ள அனுமதிப்பது செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்க வேண்டும்.

சாயிரா பானுவின் தம்பி அர்ஷத் அலி, முஸ்லிம் மத கெடுபிடிக்காரர்களுக்கு எதிராக இடைவிடாமல் போராடி வருகிறார். பதிலளிக்குமாறு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தை  உச்ச நீதிமன்றம் பணித்துள்ளது. பாஜக எம்.பி. யோகி ஆதித்யனாத், ஹிந்துஸ்தான் பாரத அரசியல் சாசனப்படி தான் ஆளப்படும். ஷரியத் சட்டங்களுக்கு இங்கு இடமில்லை. ஷரியத் சட்டப்படித்தான் எதையும் தீர்மானிக்கவேண்டும் என்று கூறுபவர்கள் ஷரியத் சட்டங்கள் எங்கு அமலில் உள்ளனவோ அங்கு செல்லலாம். என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இதற்கு அரசியல் சாயம் பூசும் நிகழ்வுகளும் மேலோங்கியுள்ளன. நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்ற இந்த இரண்டு ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என்று ஜமாதி இஸ்லாமி தலைவர் மௌலானா ஜலாலுதின் உம்ரி கூறியுள்ளார். முஸ்லிம்களின் திருமண முறைகள் விவகாரத்துகள், ஜீவனாம்சம், பல தார முறை போன்றவற்றில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு துளியும் உரிமை கிடையாது என்று அவர் உரைத்துள்ளார்.

முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பல்வேறு வழிகளிலும் இடையூறு கொடுத்து வருகிறது. ஏற்கனவே சர்ச்சைக்கிடமான பல விஷயங்களை இந்த வாரியம் எழுப்பியுள்ளது. இப்போது சாயிரா பானு விவகாரத்தை இவ்வாரியம் பெரிதுபடுத்தி வருகிறது. ஆனால், 61 இஸ்லாமிய நாடுகளில் அடுத்தடுத்து மூன்று தலாக் கூறி விவகாரத்து செய்வதும், பல தார மணமும் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளன என்பது குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்கள் வாய்திறக்க மறுப்பது ஏன்?

சென்னையின் வழக்குரைஞர் பதர் சயீதும் முத்தலாக் விவாகரத்து முறையை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சாய்ரா பானு தொடுத்துள்ள வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் பதர் சயீத்.

‘தலாக்’குக்கு தடை கோரி 50,000 முஸ்லிம்கள் மனு

முஸ்லிம் தங்களது மனைவிகளிடம் மூன்று முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரி, பாரதிய முஸ்லிம் மஹிளா அந்தோலன் (பி எம் எம் ) என்ற முஸ்லிம் பெண்களின் அமைப்பின் சார்பிலான மனுவில் 50,000 முஸ்லிம்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், இந்த நடைமுறை குரானுக்கு எதிரானது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பி எம் எம் ஏ அமைப்பின் நிறுவனர்களின் ஒருவரான ஜாகியா சோமா, டெல்லியில் செய்தியாளர்களிடம் தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரும் எங்களது மனுவில், வலைதளம் மூலமாக 50,000 பேர்  கையெழுத்திட்டுள்ளனர். எங்களது கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையத்தை அணுகியுள்ளோம்.

‘குடும்பத்துக்குள் நீதி கோருதல்’ என்ற பெயரில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், வாய்மொழியாகவும் ஒருதலைபட்சமாகவும் மேற்கொள்ளப்படும் தலாக் முறைக்கு சட்ட ரீதியாக தடை விதிக்குமாறு 92 சதவீத முஸ்லிம் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு விவாகரத்து செய்வதால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் அவர்களது குழந்தைகளின் வாழ்க்கையும் நாசமடைகின்றன.