மூங்கிலில் பெட்ரோல், டீசல் தயாரிக்கலாம் – ஆராய்ச்சியாளர் பாரதி தகவல்

 ”மூங்கிலில் இருந்து பெட்ரோல், டீசல், எத்தனால் தயாரிக்க முடியும். போதிய அளவுக்கு மூங்கில் சாகுபடி செய்தால், வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நிலை, முடிவுக்கு வந்து விடும்,” என, மூங்கில் ஆராய்ச்சியாளர் டாக்டர் பாரதி கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், மூங்கில் ஆராய்ச்சியாளரும், ஆலோசகருமான டாக்டர் பாரதி பேசியதாவது:மூங்கில் பயிர் செய்தால், 1 ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். மூங்கிலில் இருந்து கரி, துணி, அகர் பத்தி, பெட்ரோல், டீசல், சி.என்ஜி., காஸ், எத்தனால், ஹைட்ரஜன் ஆயில், கைவினைப் பொருட்கள் தயாரிக்கலாம். எரிபொருளுக்காகவே மூங்கில் வளர்க்கலாம்.

ரூ.3 லட்சம் லாபம் வனத்தில், 1 ஏக்கரில், கால் டன், அரை டன் மட்டுமே கிடைக்கும் மூங்கிலை, 40 டன் கிடைக்கும்படி நாங்கள் மேம்படுத்தியுள்ளோம். ஒருவர், 350 ஏக்கரில் மூங்கில் பயிர் செய்தால், அதிலிருந்து நாள் முழுவதும் வினியோகம் செய்யும் வகையில், பெட்ரோல் பங்க் தொடர்ந்து நடத்த முடியும்.இதன்மூலம் தினமும், 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். இதற்கான தொழில்நுட்பம், நம்மிடம் உள்ளது. 1 ஏக்கரில் மூங்கில் பயிர் செய்தால், 10 முதல், 12 ஆயிரம் லிட்டர் எத்தனால் தயார் செய்ய முடியும்.

பிரேசில் நாட்டில், வாகன எரிபொருளில், 85 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்துகின்றனர். நம்மிடம் எத்தனால் இல்லை. நாம் வெறும், 3 சதவீதம் மட்டும் தான், எத்தனால் கலக்கிறோம். எனவே, மூங்கில் சாகுபடி செய்தால், வெளிநாட்டில் இருந்து, எரிபொருள் இறக்குமதி தேவைப்படாது.

ஆண்டுக்கு 40 டன் பிராய்லர் கோழி வளர்ப்பது போல், போதிய தண்ணீர் விட்டு, அருகருகே நடவு செய்து பராமரித்து வளர்த்தால், ஆண்டுக்கு ஏக்கருக்கு, 40 டன் மூங்கில் பெற முடியும். மூங்கிலில், 1,200 வகைகள் உள்ளன. அதில் நல்ல வகையை கண்டறிந்து மேம்படுத்தி, பீமா மூங்கிலை உருவாக்கினேன். எங்கள் நிறுவனம், நாளொன்றுக்கு, ஒரு லட்சம் மூங்கில் நாற்றுகளை உருவாக்கி, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறது.

மூங்கில், கார்பன் டை ஆக்சைடில், கார்பனை எடுத்து, ஆக்சிஜனை வெளியிடுகிறது. மூங்கில் வேர், 2 அடி ஆழத்துக்கு கீழே போகாது. மண் அரிப்பை தடுக்கும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும். மூங்கில்களை வளர்த்து, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து, சூழல் காக்க அனைவரும் முன் வரவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.