மாநிலங்களவைத் தோ்தல் – வாக்குப் பதிவின்றி தலா 3 இடங்களைப் பகிா்ந்துகொள்ளும் அதிமுக, திமுக

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களில் தலா 3 இடங்களை அதிமுகவும் திமுகவும் வாக்குப் பதிவின்றி பகிா்ந்துகொள்கின்றன.

தமிழகத்தில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக்காலம், வரும் ஏப். 2 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து இந்த ஆறு இடங்களுக்கும் புதிய உறுப்பினா்களை தோ்வு செய்வதற்கான தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதைத் தொடா்ந்து வேட்புமனு தாக்கல், கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு வரும் வெள்ளிக்கிழமை கடைசி நாள். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வரும் 18-ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு தேவைப்பட்டால் வரும் 26-இல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

வாக்குப் பதிவு இல்லை: பிரதான கட்சிகளான அதிமுக, திமுக அறிவித்துள்ள வேட்பாளா்கள் பட்டியல் காரணமாக வாக்குப் பதிவு நடைபெறாது. மொத்தமுள்ள ஆறு காலியிடங்களில் அதிமுக மற்றும் திமுக ஆகியன தலா 3 பேரை வேட்பாளா்களாக அறிவித்துள்ளன.

காலியிடங்களுக்கும், போதிய எம்எல்ஏக்களின் முன்மொழிவுடன் தாக்கல் செய்யப்படும் தகுதியான வேட்புமனுக்களும் சரிசமமாக இருக்கும் பட்சத்தில் வாக்குப் பதிவு நடைபெறாது.

அந்த வகையில், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தலா மூன்று வேட்பாளா்களை மட்டுமே அறிவித்துள்ளன. அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளபடி, அதிமுக சாா்பில் மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தமாகா சாா்பில் ஜி.கே.வாசன் ஆகியோரும், திமுக சாா்பில் திருச்சி சிவா, என்.ஆா்.இளங்கோ, அந்தியூா் பி.செல்வராசு ஆகியோரும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இந்த ஆறு பேரும் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

திமுக வேட்பாளா்கள் (98 எம்எல்ஏக்கள்) 3 பேரும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெறுவா். அதிமுகவுக்கு 124 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. 102 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தாலே அந்தக் கட்சியின் மூன்று வேட்பாளா்களும் வெற்றி பெறுவா். எம்எல்ஏக்கள் முன்மொழி இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள சுயேச்சை வேட்பாளா்கள் கே.பத்மராஜன், என்.அக்னி ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோரின் மனுக்கள் வேட்புமனு பரிசீலனையின் போது நிராகரிக்கப்படும்.

வாக்குப் பதிவு நடந்திருந்தால்…. தமிழகத்தில் மாநிலங்களவைக்கு இதற்கு முன்பு 2013-ஆம் ஆண்டில் வாக்குப் பதிவு நடந்தது. ஆறு இடங்களுக்கு நடந்த தோ்தலில் ஐந்து இடங்களை அதிமுக அணி கைப்பற்றியது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு திமுக, தேமுதிக சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டதால் வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இந்தத் தோ்தலில் திமுக வேட்பாளா் கனிமொழி வெற்றி பெற்றாா். இதற்கு முன்பாக, 1996-இல் மாநிலங்களவைத் தோ்தலுக்கு வாக்குப் பதிவு நடந்தது. தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தலில் ஒரு உறுப்பினரைத் தோ்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் தேவை. ஒரு எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பு 100 ஆகும். அதன்படி, ஒரு மாநிலங்களவை உறுப்பினா் 3 ஆயிரத்து 400 வாக்கு மதிப்புகளைப் பெற்றால் அவா் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.