முரசொலி நில வழக்கு: ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

முரசொலி நிலம் தொடர்பான வழக்கில், பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக, பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, முரசொலி நிர்வாகத்துக்கு, 2019 நவம்பர், டிசம்பரில், ஆணையம் ‘நோட்டீஸ்’ அனுப்பியது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்து, தேசிய ஆதிதிராவிட ஆணையம் உத்தரவிட, தடை விதிக்கவும் கோரப்பட்டது. இந்த வழக்கில் இன்று(ஜன.,10) சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக எழுந்த புகாரில் விசாரணையை தொடரலாம்.

அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தைப் பெற்று, பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.