பிரிட்டன் ராணுவ அமைச்சருடன் ராஜ்நாத் லண்டனில் சந்திப்பு

பிரிட்டன் சென்றுள்ள மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு ராணுவ அமைச்சர் கிராண்ட் ஷாப்பை சந்தித்து பேசினார். மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ள நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு லண்டனில் ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்றுள்ளார். அவருடன் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அதிகாரிகளும் சென்றுள்ளனர். முதலில் லண்டன் சென்ற ராஜ்நாத் சிங், டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், ஒயிட் ஹாலுக்கு சென்ற அவருக்கு, பிரிட்டன் ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்நாட்டு ராணுவ அமைச்சர் கிராண்ட் ஷாப்பை அவர் சந்தித்து பேசினார். அப்போது, சர்வதேச அளவில் இருநாட்டு ராணுவ வீரர்களின் பரிமாற்றம் தொடர்பாகவும், இந்தியா – பிரிட்டன் இடையிலான பாதுகாப்பு குறித்தும் இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு மற்றும் தொழில்துறை விவகாரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், லண்டனில் உள்ள அம்பேத்கர் அருங்காட்சியகத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்குள்ள லஷ்மி நாராயண் கோவிலுக்கும் சென்று வழிபட்டார். இந்த பயணத்தின் போது, பிரதமர் ரிஷி சுனக், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் கேமரூன் ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார். பிரிட்டன் பாதுகாப்பு துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் ராஜ்நாத் சிங் உரையாட உள்ளார்.

கடந்த 2002ல், அப்போதைய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் பிரிட்டன் பயணத்தை தொடர்ந்து, 22 ஆண்டு களுக்கு பின் தற்போதைய ராணுவ அமைச்சரான ராஜ்நாத் சிங் அங்கு சென்றுள்ளார்.