பிரான்ஸ் பிரதமரானார் 34 வயது இளைஞர்

பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் பார்ன், 62, பதவி விலகியதை தொடர்ந்து, 34 வயதே ஆன கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் உள்ளார். இவரது அரசு கடந்த மாதம் குடியேற்ற சட்டத்தில் திருத்தம் செய்தது.

வழக்கமாக பிரான்சில், வெளிநாட்டு தம்பதியர் குழந்தை பெற்றால் அந்த குழந்தை 18 வயதை எட்டியதும் குடியுரிமைக்கு தகுதி பெறும். புதிய சட்ட திருத்தத்தின் படி, அவர்கள் 16 முதல் 18 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதை அரசு பரிசீலித்து முடிவு செய்யும்.

மேலும், 18 வயதுக்குள் குற்றவழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றால் குடியுரிமை கிடையாது. இது போன்று பல சர்ச்சைக்குரிய திருத்தங்களை குடியுரிமை சட்டத்தில் செய்தனர். இதற்கு ஆளுங்கட்சியிலே ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சர்ச்சையால் பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் பார்ன், 62, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய பிரதமராக பிரான்சின் கல்வி அமைச்சராக இருந்த கேப்ரியல் அட்டல், 34 என்பவரை அதிபர் இமானுவேல் மேக்ரான் தேர்வு செய்தார். இதன் வாயிலாக பிரான்ஸ் நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை கேப்ரியல் பெற்றுள்ளார்.  அத்துடன், பிரான்ஸ் பிரதமராக பதவி ஏற்கும் முதல் ஓரினச்சேர்க்கையாளர் இவர்.