அசாமில் ரூ.100 கோடி போதை பொருள் பறிமுதல்

அசாமில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அதை வைத்திருந்த நான்கு பேரை நேற்று கைது செய்தனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் எல்லைப் பகுதியில் உள்ள மிசோரத்தில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுப்ரகாண்டி பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதிலிருந்தவர்கள் போதைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து, 5.1 கிலோ ஹெராயின், 64,000 யாபா மாத்திரைகள், 4 பாக்கெட்டுகள் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. காரில் இருந்த அசாமைச் சேர்ந்த ஒருவரையும், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுவரை இல்லாத அளவு அதிக மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அசாம் மாநிலம் முழுதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.